புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் ரீமல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வெப்ப அலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏழு முக்கிய கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ரீமல் புயலுக்கு பிந்தைய நிலையை ஆய்வு செய்வதற்கான முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேற்குவங்க கடற்கரை வழியாக கடந்து சென்ற ரீமல் புயல் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பாதிப்புக்களை ஆய்வுசெய்து நிவாரணப்பணிகளை முடிக்கி விடுவது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை அதிகரித்து வரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் வெப்ப அலை காரணமாக 33 தேர்தல் அலுவலர்கள் உயிரிழந்தது உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்ப அலை தொடர்பான பாதிப்புகளில் கவனம் செலுத்தும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 5ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள உலக சுகாதார தினத்துக்கு முன்பாக, அதன் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
நாளின் நான்காவது கூட்டம், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய 100 நாட்களுக்கான அரசின் வேலைத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கானது. முக்கிய கொள்கைகளை முன்னெடுப்பது மற்றும் நிர்வாக உத்திகள் குறித்து இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டங்களுடன், தற்போது வெளியாகி உள்ள அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், 4ம் தேதி வெளியாக உள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.