ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் -2’ திரைப்படம் வரும் ஜூன் 12ம் தேதி திரை காணவிருக்கிறது.
அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஷங்கர், கமல், அனிருத், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டு இயக்குநர் ஷங்கர் குறித்தும் கமலின் நடிப்பு குறித்தும் பேசியிருக்கின்றனர்.
கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘விக்ரம்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கமல் தொடர்ந்து பல படங்களில் பிஸியாகி, நீண்ட நாள் எதிர்பார்த்த ‘இந்தியன் -2’ படத்தில் ஷங்கருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார். ரசிகர்களும் இப்படத்தை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், “இது நீளமான கதை. எங்கிருந்து ஆரம்பிகிறதுனு தெரில. ஷங்கர் அடைந்திருக்கும் இந்த உயரம் அதிர்ஷ்டம், விபத்து அல்ல. அன்று பார்த்த அதே துடிப்புடன் இன்றும் இருக்காரு. அவர் முதன்முதல்ல ஒரு கதையை எடுத்துட்டு என்கிட்ட வந்தாரு. அப்போ எனக்கு அந்த சித்தாந்தத்துல உடன்பாடு இல்லனு நடிக்கல. இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். ஷங்கர் இதுக்கு பிறகும் என்கிட்ட வந்தாரு. அப்போ நான் சிவாஜி சாரை வச்சு ஒரு படத்தை இயக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். அப்போ அதே மாதிரியான கதையைதான் ஷங்கர் சொன்னாரு. அப்போ நான் சிவாஜி ஐயாகிட்ட இதைப் பத்தி சொல்லும்போது அவரும் நீ சொன்ன கதையில நீ மகன் நான் அப்பா, இதுல அப்பாவும் மகனும் நீதான். இந்தக் கதையை பண்ணுனு சொன்னாரு.
நான் பலரிடம் பல விஷயங்கள் கத்துக்கிட்டதுனாலதான் இன்னைக்கு ரசிகர்கள் முன்னாடி நிக்கிறேன். சுபாஷ்கரன் இந்த படத்தை இன்னும் பார்த்திருக்கமாட்டாரு.எங்க ரெண்டு பேரையும் நம்பி பல விஷயங்கள் பண்ணுங்கன்னு சொன்னாரு. இந்தப் படத்துக்கு கொரோனா, விபத்துனு பல தடைகள் வந்துச்சு. என்னுடன் இந்தப் படத்துல உதயநிதி உறுதுணையாக நின்றது போல அவரோடு நான் உடன் நிற்கும் நேரம் வரலாம்.
‘மருதநாயகம்’ படத்துக்கு ரவி வர்மன் துணை ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தார். இந்த படத்துல் எது கிராபிக்ஸ்னு கேட்டீங்கன்னா.. அது தான் ஸ்ரீனிவாஸ் மோகனுடைய வெற்றி. அது போலதான் சொல்லப்போறாங்க. இந்தப் படத்துல ஒரு அசிஸ்டன்ட் என்கிட்ட ‘உங்க கூட நான் இந்த படத்துல மறுபடியும் வேலை பாக்குறேன்’னு சொன்னாரு. அவர் விபத்துல இறந்துட்டாரு. அதே போல் விவேக், மனோபாலா. அவங்க இல்லைங்கிறது உங்களுக்கு குறையாக இருக்கலாம். ஆனால், படத்துல அது குறையாக இருக்காது.
என் வயசை விட 15 வயசுதான் இந்தியன் தாத்தாவுக்கு அதிகம். என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவுல நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம். இந்த விழாவுல இதை ஏன் பேசுனீங்கனு கேட்பாங்க. எந்த விழாவிலையும் பேசுவேன். இந்த நாட்டின் ஒற்றுமையை நாம் காக்க வேண்டும். அதைதான் இந்தப் படம் உணர்த்துகிறது. ஸ்ருதி மனசு வச்சிருந்தா நான் இப்போவே தாத்தாதான்.” எனப் பேசியவர்,
“ஒரு முறை நடிகர் டி. ராஜேந்தர் என்னைக் கட்டிபிடிச்சு ‘ நீங்க சினிமாவை விட்டு போகக்கூடாது’னு அழுதாரு. நான் இங்க நிக்குறதுக்கு முக்கிய காரணத்துல அவரும் ஒருத்தர்” என்று பேசியிருக்கிறார்.