மதுரை: மதுரை விமான நிலையத்தில் வாகன கட்டணம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை விமான நிலையத்துக்கு தினமும் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்காக நூற்றுக்கணக்கான தனியார், சொந்த வாகனங்கள் வந்து செல்கின்றன. விமான நிலையம் வரும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவன ஒப்பந்த காலம் சமீபத்தில் முடிவடைந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, புதிதாக ஜூன் 1ம் தேதி முதல் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விமான நிலையம் வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. நேற்று முதல் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டண விகிதம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, வாகன பார்க்கிங் கட்டணம் ரூ.20 (30 நிமிடம் வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக கார்களுக்கு 30 முதல் 120 நிமிடங்களுக்கு ரூ.35, தனியார் கார்களுக்கு ரூ.30 மற்றும் ரூ.40, டெம்போ (ஏழு இருக்கைகளுக்கு மேல்) ரூ.60 மற்றும் ரூ. 80, பேருந்து, டிரக் ரூ.170 மற்றும் ரூ.250, டூவீலர்களுக்கு முதல் 30 நிமிடங்களுக்கு ரூ.10 மற்றும் 30 முதல் 120 நிமிடங்கள் வரை ரூ.15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கார்கள், கோச், பேருந்து, டிரக் மற்றும் மினி பஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய 2 நிமிடம் 30 வினாடிகளுக்கு மேலுள்ள வணிக ரீதியான வாகனங்களுக்கான கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கு, இரண்டு மணி நேரத்துக்குப்பின் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.10 என கட்டணம் அதிகரிக்கும். வெளி மாவட்ட, மாநில, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை அழைத்து செல்வதற்காக வரும் தனியார் கார்களுக்கு 3 நிமிடத்திற்கு ரூ.135 என புதிய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வந்த தனியார் கார்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு மூன்று நிமிடத்தில் வெளியே வந்தாலும் ரூ. 135 கட்டணமாக செலுத்த வேண்டும் என வடமாநில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வாகன ஓட்டுநர்களுக்கும், சுங்க ஊழியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
விமானத்திலிருந்து பயணிகள் வெளியே வந்தபின் தான் வாகனங்களை அழைப்பதாகவும், அதன்பிறகு விமான நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றிக் கொண்டு 5 நிமிடங்களில் வெளியே வந்தாலும் ரூ. 135 கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல என வாகன ஒட்டிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வாகனங்கள் உள்ளே சென்று வரும் நேரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை விமான நிலைய நிர்வாகம், வாகன கட்டணம் வசிக்கும் தனியார் நிறுவனம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தபோவதாக விமான நிலைய ஓட்டுநர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.