India National Cricket Team: 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்திய நேரப்படி இன்று (ஜூன் 2) முதல் தொடங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் குரூப் சுற்றில் குரூப் ஏ-வில் இடம்பெற்ற அமெரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடா அணியை வென்று, வெற்றியுடன் தொடரை தொடங்கியிருக்கிறது. அமெரிக்க அணி வங்கதேச அணிக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் ஏற்கெனவே பலத்த நம்பிக்கையுடன் இருந்தது. தற்போது இந்த வெற்றி அவர்களுக்கு டபுள் பூஸ்ட்டை அளிக்கும்.
மேலும், இந்திய நேரப்படி இன்று இரவு குரூப் சி-இல் மேற்கு இந்திய தீவுகள் – பப்புவா நியூ கினியா (WI vs PNG) அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல மேற்கு இந்திய தீவுகள் விரும்பும், கத்துக்குட்டி அணியான பப்புவா நியூ கினியா கடுமையாக போட்டிப் போட விரும்பும். அந்த வகையில் முதல் நாளான இன்றில் இருந்தே தொடர் சூடுபிடித்துவிட்டது எனலாம்.
இந்திய அணியின் அந்த 3 விஷயங்கள்
அப்படியிருக்க இந்த தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற கேள்வியும் தற்போதே எழுகிறது எனலாம். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணி, அனுபவம் வாய்ந்த நியூசிலாந்து அணி, போட்டியை நடத்தும் மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணியும் அந்த முக்கிய ரேஸில் இடம்பெற்றிருக்கிறது. இருப்பினும், இதில் இந்திய அணிக்கு கோப்பையை கைப்பற்ற ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடர் சாம்பியன் பட்டம் வென்ற பின் இந்திய அணி (Team India) அடுத்து ஒருமுறை கூட டி20 உலகக் கோப்பையை வெல்லவில்லை. 2014ஆம் ஆண்டில் பைனல் வரை வந்து இந்திய அணி அதை தவறவிட்டது. சமீபத்தில் 2021ஆம் ஆண்டில் குரூப் சுற்றோடு வெளியேறிய இந்தியா, 2022ஆம் ஆண்டு அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்ததையும் மறக்க இயலாது.
எனினும், இம்முறை இந்திய அணிக்கு வாய்த்துள்ள வீரர்கள், கடந்த கால தவறுகளை களைய ஒரு முக்கிய பங்கு வகிப்பார்கள் எனலாம். இந்நிலையில், இந்திய அணியில் காணப்படும் இந்த மூன்று விஷயங்களால், இந்த முறை 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுகிறது என அடித்துச்சொல்லலாம். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
X Factor வீரர்கள்…
டி20 என்று வந்துவிட்டாலே, போட்டி நடைபெறும் அன்று சிறப்பாக விளையாடும் அணிதான் வெற்றி பெறும். அதேபோல், டி20இல் நாக்அவுட் போட்டி அல்லது இறுதிப்போட்டி என்றால் அந்த அணியில் நிச்சயம் ஒரு X Factor வீரரின் அதிரடியே கோப்பையை நெருங்க வைக்கும். அந்த வகையில் இந்த முறை இந்தியா இரண்டு X Factor வீரர்களை பெற்றிருக்கிறது. பேட்டிங்கில் சூர்யகுமார், பந்துவீச்சில் பும்ரா. இந்த இருவரும் எதிரணிக்கு நிச்சயம் சிம்மசொப்பனமாக இருப்பார்கள்.
சுழல் பலம்
எதற்கு இரண்டு சுழற்பந்துவீச்சுளார்கள், இரண்டு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என 4 அணிகளை ஸ்குவாடில் வைத்துள்ளீர்கள் என ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர் அளித்த பதில்,”அதனை நீங்கள் தொடர் நடக்கும் போது பார்ப்பீர்கள்” என்றாக இருந்தது. மேற்கு இந்திய தீவுகளில் சுழற்பந்துவீச்சு ஒரு முக்கிய ஆயுதமாக இருக்கும் என்பதால் இந்திய அணி திறமையான ஸ்பின்னர்களை ஸ்குவாடில் அள்ளிப்போட்டுள்ளது.
இதில் ஜடேஜா மற்றும் அக்சர் ஆகியோர் பேட்டிங்கிலும் நல்ல பார்மில் இருப்பது நிச்சயம் பெரிய போட்டிகளில் கைக்கொடுக்கலாம். குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் ஒரே பிளேயிங் லெவனில் விளையாடுவது கடினம் என்றாலும், அதற்கான வாய்ப்பை சூழலே தீர்மானிக்கும் எனலாம். மற்ற அணிகளை விட நம்மிடம் ஸ்பின்னர்கள் அதிகம் இருப்பதும் நமக்கு பெரிய சாதகம்தான்.
நீண்ட பேட்டிங் வரிசை
இந்திய அணிக்கு தற்போது இருக்கும் நீண்ட பேட்டிங் வரிசை என்பது இதற்கு முன் எந்த தொடரிலும் இருந்ததில்லை. போட்டி சூழலுக்கு ஏற்ப உங்களால் சஞ்சு சாம்சன், தூபே, அக்சர் பட்டேல் ஆகியோரை பயன்படுத்திக்கொள்ள இயலும். ஜெய்ஸ்வாலை கூட ஓப்பனிங்கில் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். எப்படி பார்த்தாலும் 8, 9 வீரர்கள் பேட்டிங் செய்வார்கள். பந்துவீச்சு ஆப்ஷனும் 6-7 இருக்கும்.
நிச்சயம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று விடும் என்றாலும், அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளை குரூப் சுற்றில் அதிரடியாக வெல்வது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும் எனலாம். அந்த வகையில் மேலே கூறிய இந்த மூன்று விஷயங்கள் நிச்சயம் இந்திய அணியை கோப்பையை நெருங்க வைக்கும்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.