ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் உள்ள மவுண்ட் இபு என்ற எரிமலை இன்று மீண்டும் வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து அடர்த்தியான சாம்பல் மற்றும் மணல் வேகமாக வெளியேறுகிறது. இந்த சாம்பல் அப்பகுதியில் சுமார் 7,000 மீட்டர் பரப்பளவுக்கு படர்ந்துள்ளது.
சுமார் 6 நிமிடங்கள் வரை எரிமலை வெடித்ததாக இந்தோனேசிய புவியியல் நிறுவன தலைவர் முகமது வாபித் தெரிவித்தார். எரிமலை சீற்றம் தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது. விண்ணை முட்டும் அளவுக்கு ஒரு தூண் போன்று எரிமலை சாம்பல் வேகமாக பாய்வதை படத்தில் காண முடிகிறது.
எரிமலை ஏற்கனவே சீற்றத்துடன் இருந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டனர். எரிமலை வெடித்தபோது, காற்று மேற்கு நோக்கி வீசியது. இதன் விளைவாக எரிமலை சாம்பல் காற்றின் மூலம் காம் ஐசி கிராமத்தில் உள்ள வயல்வெளியில் விழுந்தது. மணல் கலந்த சாம்பல் மழை தொடரும் வரை அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே, இபு எரிமலை தொடர்ந்து வெடித்து வருகிறது. கடந்த வாரத்தில் இருந்து தொடர்ச்சியான வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் சிறியதும் பெரியதுமான 120 எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன.