உதகை: உதகையில் டாஸ்மாக் மதுவில் கலப்படம் செய்து விற்ற புகாரின்பேரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் உட்பட 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வந்தன. 500 டாஸ்மாக் கடைகளை அரசு மூட உத்தரவிட்டதை தொடர்ந்து, நீலகிரியில் மூன்று கடைகள் மூடப்பட்டதால், தற்போது 73 கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் தினசரி ரூ.1.5 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது.
ஏப்ரல், மே மாதம் கோடை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். மேலும், மது வாங்கிக்கொண்டு சொந்த ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். மேலும், குளிர் பிரதேசமாக இருப்பதால் வழக்கத்தை விட மது விற்பனை கூடுதலாக உள்ளது. இதை பயன்படுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் தண்ணீர் உள்ளிட்டவற்றை மதுவில் கலந்து விற்பனை செய்வதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டு அதிக அளவில் வந்தது.
இதுகுறித்த குற்றச்சாட்டின் பேரில் சென்னையில் உள்ள டாஸ்மாக் பறக்கும் படை அதிகாரிகள் உதகை மணிக்கூண்டு பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் டாஸ்மாக் மதுவில் தண்ணீர் கலந்த புகாரின் பேரில் இரண்டு மேற்பார்வையாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்வது தொடர்ந்தது. இதேபோல் கூடுதல் கூடுதல் விலைக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் கடந்த சனிக்கிழமை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் உதகை ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லோயர் பஜாரிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஆய்வு செய்தனர். இதில் மதுவில் தண்ணீர் கலந்து விற்பனை செய்ததும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 4 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் 9 டாஸ்மாக் ஊழியர்கள் என 13 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாவட்டம் முழுவதும் பல கடைகளில் ஆய்வு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்டத்தில் ஒரே சமயத்தில் 13 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.