“காவிரி பிரச்சினையை அரசியலாக்குவது சரியல்ல” – பிரகாஷ்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ராஜிவ் காந்தி அறக்கட்டளை சார்பில் நேற்று (ஜூன் 02) ஜவஹர்லால் நேருவின் 60-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேருவின் தேசியக் கொள்கைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாட்டின் முதல் பிரதமரை பற்றி பேசுகிறோம். ஆனால் நான்தான் கடைசி பிரதமர், ஆயிரம் வருடம் இருப்பேன் என்று ஒருவர் தேர்தல் முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கின்றார்.

ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளைப் பேசவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. நேரு கல்வி, தொழில் நிறுவனங்கள், அறிவியல் இவைதான் இந்தியாவுக்கு கோயில் என்றார். ஆனால் இப்போதுள்ள தெய்வமகன் (பிரதமர்) படைத்த கடவுளுக்கே வீடு கட்டி அதற்காக வாக்கு போடு என்று கேட்கின்றார்.

இந்தியாவிலேயே நேருவைப் பற்றி அதிகமாக பேசியது இந்த தெய்வமகன்தான். அது ஒரு வியாதி. இப்போது வரும் கருத்து கணிப்புகள் இஷ்டத்துக்கும் வெளியிடப்படுகிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த நான் தமிழர்களைப் பற்றி பேசக்கூடாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறுவது சரியல்ல.

பிரகாஷ்ராஜ் தமிழனா இல்லையா என்று என்னை செல்லமாக ஏற்றுக்கொண்ட மக்களை கேளுங்கள். நான் கர்நாடகாகாரன்தான். ஆனால் நான் இந்தியன். பல மொழிகளில் என்னை வரவேற்கின்றனர். நான் அருமையாக தமிழ்பேசுவதே தமிழை மதிப்பதால் தான்.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு பெற்றதில் பெரிய வரலாற்று போராட்டம் அடங்கியுள்ளது. அதன்படி அண்ணா 41 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்தார். அது கருணாநிதி முதல்வரானதும் 49 ஆனது. அதன்பின் எம்.ஜி.ஆர். முதல்வரானதும் 68 சதவிகிதமானது. பின்னர் மீண்டும் கருணாநிதி முதல்வரானதும் 69 சதவிகிதமானது. அதை மத்திய அரசு 50 சதவிகிதமாக்க முயன்றது.

அதைத் தடுக்கவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீதிமன்றம் சென்று அதில் வெற்றி பெற்றார். மறைந்த முதல்வர் கருணாநிதி சம்பந்தப்பட்ட விழா என்பதால் அவரை நினைவு கூர்ந்து பேசினேன். ஆனால், ஜெயலலிதாவை குறைத்து பேசவில்லை. அதில் அனைவரது பங்கும் உள்ளது என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்வது அவசியம். தீபம் எரிவதை விட அதை ஏற்றியது உயர்ந்ததாகும்.

தமிழகத்தில் கோயிலுக்கு செல்வோர் அதிகமிருந்தாலும், அரசியலில் ஆன்மிகத்தை மக்கள் எடுத்துவரவில்லை என்பதை பாஜக தலைவர் அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும். காவிரி பிரச்சினையை அரசியிலாக்குவது சரியல்ல.

காவிரி ஆறு தொடங்கி முடியும் வரையில் மரங்கள் அழிப்பு, ஆக்கிரமிப்பு, மணல் எடுப்பது என பல பிரச்சினைகள் உள்ளன. அதனால் ஆற்று நீர் குறைந்துவிட்டது. ஆகவே அறிவியல் பூர்வமாக கர்நாடக, தமிழக அரசுகளை இணைத்து, அறிவியலாளர்களின் ஆலோசனை பெற்று மத்திய அரசு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

அதனை விடுத்து தமிழனா, கன்னடனா என்று பேச வேண்டாம். மொழிக்கும், தண்ணீருக்கும் என்ன சம்மந்தம்? காவிரி பிரச்சினை வந்தால் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாதிப்பதில்லை. ஆனால், அப்பாவிகள் பாதிக்கும் வகையிலே அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர்.

காவிரி பிரச்சனையை அறிவியல் பூர்வமாக தீர்ப்பதை விடுத்து பிரதமர் தியானமிருக்கின்றார். எனக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. நான் மக்களோடு இருக்கின்றேன். தற்போது அரசியல் தொழிலாகிவிட்டது” இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.