ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடலாக விளங்குகின்ற கிரெட்டா எஸ்யூவி தொடர்ந்து மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற மாதம் தோறும் 14,000க்கு கூடுதலான விற்பனை எண்ணிக்கை சராசரியாக பதிவு செய்து வருகின்றது. கடந்த மே 2024ல் 14,662 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.
மே மாத விற்பனையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 1.13% வளர்ச்சியை முந்தைய ஆண்டு மே மாதத்துடன் (48,601 யூனிட்டுகள்) ஒப்பீடுகையில் பெற்றிருக்கின்றது. கடந்த 2024 மே மாதம் மொத்தமாக 49,151 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருக்கின்றது. ஆனால் ஏப்ரல் 2024 மாதத்துடன் (50,201 யூனிட்டுகள் ) ஒப்பீடுகையில் 2 % வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, இந்நிறுவனத்தின் விற்பனையில் 67 % எஸ்யூவி மாடல்களாகும்.
மேலும் இந்நிறுவனம் தற்பொழுது 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ள நிலையில் இதில் பாதிக்கு மேலாக கிரெட்டா காருக்கான முன்பதிவு என குறிப்பிட்டு இருக்கின்றது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சிஓஓ தருண் கர்க் கூறுகையில், “கிரெட்டா என் லைனுக்கு நாங்கள் நல்ல டிமாண்டை பெற்றுள்ளதால், சுமார் 10 வாரங்கள் வரை அதிகபட்ச காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளது. N லைன் மாடலுக்கு புதிய மற்றும் இளம் வாடிக்கையாளர்களைப் பெறுவதால், விநியோகங்களை அதிகரிக்க முயற்சிக்கிறோம்.
என்-லைன் விற்பனை எண்ணிக்கை அதிகம் பெறும் நோக்கமில்லாமல், அது தனித்துவமான ஒன்றை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கானதாகும். இந்தியாவில் கிடைக்கின்ற N லைன் மாடல்களுக்கும் நடப்பு ஆண்டில் 15,000 எண்ணிக்கையை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கின்றேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் Creta, Venue, Alcazar, Exter, மற்றும் Tucson உடன் எலக்ட்ரிக் சந்தையில் Ioniq 5 , Kona என மொத்தமாக 7 எஸ்யூவிகள், Grand i10 Nios, i20 இரண்டு ஹேட்ச்பேக் ரக மாடல்கள் மற்றும் Aura, Verna இரண்டு செடான்கள் என ஒட்டுமொத்தமாக 11 மாடல்களை கொண்டுள்ளது.