இந்தூர்: மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஞாயிறு இரவு டிராக்டர் – ட்ராலி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ராஜஸ்தானின் மோதிபுரா கிராமத்தில் இருந்து மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டம் குலாம்பூருக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்களாவர்.
விபத்து நடந்த உடனேயே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் விபத்து குறித்து ராஜ்கர் ஆட்சியர் ஹர்ஷ் தீக்ஷித் கூறுகையில், “விபத்துக்குள்ளான டிராக்டர்-ட்ராலியில் 40 முதல் 50 பேர் இருந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் பிப்லோடி கிராமத்துக்கு அருகே வாகனம் வந்தபோது வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது.
மாவட்ட மருத்துவமனையில் காயமடைந்தவர்களில் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் தலை, நெஞ்சகப் பகுதி தீவிர காயங்களுக்காக போபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளானர். அந்த இருவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இல்லை.” என்றார்.
டிராக்டர் ட்ராலி என்பது டிராக்டரின் பின்புறத்தில் பயணிகள் அமர்ந்து செல்வதுபோல் ஒரு வாகனத்தை இணைத்துப் பயன்படுத்தப்படும் வாகனமாகும்.