இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 100 டன் தங்கம் தான் இந்தியாவில் பேசப்பட்ட பரபரப்பான விஷயம்.
என்ன அது?
இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் தங்கள் நாட்டின் தங்கத்தை பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் வைத்துள்ளனர். இப்படி வெளிநாடுகளில் தங்கம் சேமித்து வைக்கும் பழக்கம், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டது.
ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில், “சில நாள்களுக்கு முன்னால் வரை, இந்தியாவில் 308 டன் தங்கம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் இருந்து 100.28 டன் தங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இரண்டையும் சேர்த்து தற்போது இந்தியாவில் இந்தியாவுக்கு சொந்தகக 408 டன் தங்கம் உள்ளது.
இதுப்போக, இந்தியாவுக்கு சொந்தமான தங்கம் வெளிநாடுகளில் இன்னும் 413.9 டன் தங்கம் உள்ளது. மொத்தமாக, இந்தியாவுக்கு சொந்தமாக தற்போது 822 டன் தங்கம் உள்ளது.
2023-24 நிதியாண்டில் மட்டும் இந்தியா, புதிதாக 27.46 டன் தங்கம் வாங்கியுள்ளது என்று கூறுகின்றனர்.
இந்தியாவுக்கு சொந்தமான தங்கம் எப்படி அந்த வங்கிக்கு சென்றது?
1990-91 அந்நிய செலாவணி நெருக்கடியின் போது, இந்தியா தன்னிடமிருந்த தங்கத்தை பேங்க ஆஃப் இங்கிலாந்திடம் அடமானம் வைத்து 405 மில்லியன் டாலர் கடன் வாங்கியது. 1991-ம் ஆண்டு நவம்பர் மாதமே, இந்த அடமானத்தை இந்தியா மீட்டுவிட்டது. ஆனாலும் போக்குவரத்து காரணங்கள், வணிக லாபம் போன்ற காரணங்களுக்காக இவ்வளவு நாள்கள் இந்தியா அங்கேயே தங்கத்தை வைத்திருந்தது.
இப்போது எதற்காக கொண்டுவரப்பட்டது?
தற்போது நிலவி வரும் பல்வேறு சர்வதேச பிரச்னை போன்ற காரணங்களுக்காக இந்தியா மீண்டும் தனது தங்கத்தை இங்கேயே கொண்டு வந்துவிட்டது. இதனால், லாக்கர் வாடகை குறையும்.