மாலத்தீவு தடை எதிரொலி: இந்திய கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்ல குடிமக்களுக்கு இஸ்ரேல் அறிவுறுத்தல்

புதுடெல்லி: இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதிப்பதாக மாலத்தீவுகள் அரசு அறிவித்ததை அடுத்து, இந்திய கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்லுமாறு இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், “இஸ்ரேலியர்களை வரவேற்கவில்லை என்று மாலத்தீவு அறிவித்துள்ளதால், அழகான சில இந்திய கடற்கரைகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இங்கே இஸ்ரேலியர்கள் அன்புடன் வரவேற்கப்படுவார்கள். அதோடு, மிகுந்த விருந்தோம்பலையும் நீங்கள் பெறுவீர்கள்.

நமது தூதரக அதிகாரிகள் இந்த இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த கடற்கரைகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். எங்களின் பரிந்துரைகளை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லட்சத்தீவு, கோவா, அந்தமான் நிகோபர் தீவுகள், கேரளா ஆகியவற்றின் கடற்கரை புகைப்படங்கள் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் தனிநபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கும் முடிவை மாலத்தீவுகள் அரசு நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது. மாலத்தீவு அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அமைச்சரவையின் பரிந்துரையை அடுத்து, அதிபர் முகமது மொய்சு, இஸ்ரேலிய பாஸ்போர்ட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளார்.

இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவிற்குள் நுழைவதைத் தடுக்க தேவையான சட்டங்களைத் திருத்துவது மற்றும் இந்த முயற்சிகளை மேற்பார்வையிட அமைச்சரவை துணைக் குழுவை நிறுவுவது ஆகிய முடிவுகளை அமைச்சரவை எடுத்துள்ளது. மேலும், பாலஸ்தீனியர்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கு சிறப்பு தூதுவரை நியமிக்க அதிபர் முகமது மொய்சு தீர்மானித்துள்ளார்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா நிவாரண முகமையின் உதவியுடன், பாலஸ்தீன மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான நிதி திரட்டும் பிரச்சாரத்தையும் அவர் தொடங்க முடிவு செய்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் மாலத்தீவு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.