இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் ஜூன் 1-ம் தேதியோடு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏழு பேர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு இன்று அவசர கடிதம் எழுதியிருக்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரந்தானம், பி.ஆர்.சிவகுமார், சி.டி.செல்வம், எஸ்.விம்லா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தில், `நாடாளுமன்றத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய விதம் உண்மையில் கவலையளிப்பதாக இருக்கிறது. கடந்த காலங்களில் விதிமீறல்களில் அப்போதிருந்த தேர்தல் ஆணையம் இப்போதிருக்கும் தேர்தல் ஆணையத்தைப் போல தயக்கம் காட்டவில்லை என்பதைக் கூறுவது எங்களுக்கு வேதனையளிக்கிறது.
தற்போது மத்தியில் ஆளும் கட்சி ஆட்சியை இழந்தால், ஆட்சி மாற்றம் அவ்வளவு சுமுகமாக இருக்காது. அரசியலமைப்புக்கு நெருக்கடி ஏற்படலாம். மேலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது ஏற்படும் அசாதாரண சூழலை தடுக்கவும், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் உச்ச நீதிமன்றத்தின் உடனடி தலையீடு தேவை.
முக்கியமாக, அரசியலமைப்புக்கு நெருக்கடி எனும்போது எந்தவொரு உடனடி எதிர்வினையாற்ற முதல் ஐந்து நீதிபதிகள் முன்னிலையில் இருப்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும். தொங்கு நாடாளுமன்றம் சூழல் ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பொறுப்பு கூடும். அப்போது, அதிக இடங்களை வென்ற வாக்குப்பதிவுக்கு முந்தைய கூட்டணியை முதலில் அழைப்பது என்ற ஜனநாயக முன்மாதிரியை அவர் பின்பற்றுவார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அதோடு, குதிரை பேரத்தின் சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே அவர் தடுக்க முயற்சிப்பார். இறுதியாக, எங்கள் அச்சங்கள் தவறானவை என்றும், வாக்கு எண்ணிக்கை மற்றும் நியாயமான முறையில் முடிவுகள் அறிவிக்கப்படுவதன் மூலம் தேர்தல்கள் சுமுகமாக முடிவடையும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.