நாக்பூர்,
நாக்பூரில் உள்ள இந்திய ராணுவத்தின் பிரம்மோஸ் ஏவுகணை மையத்தில் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் என்ஜினீயராக பணியாற்றிவர் நிஷாந்த் அகர்வால். இவர் 2018-ம் ஆண்டு ராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். நிஷாந்த் அகர்வால் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் பெண்கள் போல முகநூல் மூலமாக இளம் என்ஜினீயரான நிஷாந்த் அகர்வாலிடம் ராணுவ ரகசியங்களை பெற்று இருந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை நாக்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போது நிஷாந்த் அகர்வால் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்திய ராணுவத்தின் ரகசியங்களை கூறியது நிருபிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வி. தேஷ்பாண்டே நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் மற்றும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.