சென்னை: தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திங்கள்கிழமை எந்தவொரு இடத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகவில்லை. மாநிலம் முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. மே மாதத்தில் ஆங்காங்கே கனமழை பெய்ததால், பரவலாக வெப்பம் குறைந்திருந்தது. பின்னர் ‘ரீமல்’ தீவிர புயல் உருவான பிறகு, தமிழகம் நோக்கி குளிர்ந்த கடல் காற்று வீசும் முறையில் மாற்றம் ஏற்பட்டது. ஆந்திரா மாநிலப் பகுதியில் இருந்து சூடான தரைக்காற்று தமிழகம் நோக்கி வீசியது. இதனால் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வேலூர் போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது.
குறிப்பாக சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், வேலூர், திருத்தணி போன்ற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியது. வேலூரில் மே மாதத்தில் பதிவான வெப்ப அளவுகளில் 7-வது அதிகபட்ச அளவு வெப்பம் பதிவானது. இரவு நேரங்களில் வீடுகளில் கடும் புழுக்கம் நிலவியது. இதனிடையே தென்மேற்கு பருவமழை கடந்த மே 30-ம் தேதி தொடங்கிய நிலையில், வட தமிழக மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஜூன் 2-ம் தேதி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செமீ, கடலூர் மாவட்டம் தொழுதூரில் 8 செமீ, 3-ம் தேதி அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செமீ, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் 15 இடங்களுக்கு மேல் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவான நிலையில், திங்கள்கிழமை ஒரு இடத்திலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகவில்லை.
திங்கள்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 98 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 97 டிகிரி, வேலூரில் 93 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.