பழநி: உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, பழநி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் கடைகளை மறைத்து சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் சுவருக்கு பதிலாக தற்போது தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2.5 கி.மீ. தூரம் கிரிவலப்பாதை உள்ளது. பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கிரிவலப்பாதையை இனிமேல் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்த கூடாது. தனியார் வாகனங்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கிரிவலப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மார்ச் 8-ம் தேதி முதல் கிரிவலப்பாதைகள் அடைக்கப்பட்டு தனியார் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
மேலும், கிரிவலப்பாதையில் வணிக நோக்கிலான கடைகள் ஏற்படாமல் தடுக்க தனியார் கடைகளுக்கு முன் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் கிரிவலப்பாதையில் உள்ள கடைகளை மறைத்து 6 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், கடைகளை மறைத்து சுற்றுச்சுவர் அமைத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, சுற்றுச்சுவர் அமைக்கும் திட்டத்தை பழநி கோயில் நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, சுற்றுச்சுவருக்கு பதிலாக ஒரு அடி உயரத்துக்கு தடுப்பு சுவரும், அதற்கு மேல் 5 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்க முடிவு செய்து தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.