ஆந்திர அரியணை யாருக்கு? – 9 மணி நிலவரப்படி தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை

அமராவதி: தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தின் அரியணை யாருக்கு? என்பது இன்று மதியத்திற்குள் தெரியவரும். ஆந்திர மாநிலம் முழுவதும் 33 இடங்களில் 401 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மே மாதம் 13-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. காங்கிரஸ் கட்சியோ, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தன.

இம்முறை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அவரது சொந்த தங்கையான ஒய்.எஸ். ஷர்மிளாவை காங்கிரஸ் களம் இறக்கியது. இவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கியதோடு, அக்கட்சி சார்பில் கடப்பா எம்பி தொகுதியிலும் அவர் போட்டியிட்டுள்ளார். இவர் இம்முறை தனது சகோதரரான ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சித்தது போன்று எதிர்கட்சிகள் கூட விமர்சிக்கவில்லை.

தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்னரும் ஆந்திராவில் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை வீச்சு, தடியடி என சில மாவட்டங்களில் வன்முறை தூண்டி விடப்பட்டது. ஜெகன் கட்சியை சேர்ந்த மாசர்லா சட்டமன்ற தொகுதி வேட்பாளரான பின்னெலி ராமகிருஷ்ணுடு என்பவர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்கு இயந்திரத்தையே தூக்கி போட்டு உடைத்தார்.

அனந்தபூரில் வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்களை ஜெகன் கட்சியின் வேட்பாளர் கன்னத்தில் அறைந்தார். அதற்கு வாக்காளரும் வேட்பாளரை திருப்பி அடித்தார். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது போன்ற சம்பவங்கள் இம்முறை அதிகமாக நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பதி, சித்தூர், அனந்தபூர், உள்ளிட்ட பகுதிகளில் 25 துணை ராணுவப் படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் முழுவதும் 33 ஊர்களில் 401 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் 8.30 மணி முதல் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காலை 9 மணி நிலவரப்படி, குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு 1600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இதேபோன்று புலிவேந்துலா தொகுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலை பெற்றுள்ளார். பிட்டாபுரம் தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் முன்னிலை பெற்றுள்ளார். தெலுங்கு தேசம் 25 சட்டமன்ற தொகுதிகளிலும் இதன் கூட்டணி கட்சியான ஜனசேனா 4 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் முன்னிலையில் இருந்தன. ஜெகன் கட்சியினர் பல தொகுதிகளில் பின்னடைவே காணப்பட்டன.

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகளில் ஒரு தொகுதியில் தெலுங்கு தேசம் முன்னிலை பெற்றிருந்தது. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் – 3 பாஜக – 3 முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.