இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று நாசாவ் கவுண்டி நிர்வாகி தெரிவித்திருக்கிறார்.
2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் போட்டியின் போது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அப்படி எதுவும் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நாசாவ் கவுண்டி நிர்வாகி புரூஸ் பிளேக்மேன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம். இது மிகப்பெரிய போட்டி என்பதால் கூடுதல் பாதுகாப்பை வழங்க வேண்டும். நாசாவ் கவுண்டி காவல்துறை, போர்டு அத்தாரிட்டி போலீஸ், தீயணைப்பு வீரர்கள் என எல்லோருமே தயாராக உள்ளனர்.
அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காது. ஒருவேளை நடந்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.