கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்; கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் மிக முக்கியமான தேசியப் பிரச்சினை வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்தாமல் நாட்டை ஒரு பங்கு கூட முன்னோக்கிச் செல்ல முடியாது எனவும் வலியுறுத்தினார்.
இலங்கையின் வரலாற்றில் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக இந்நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் சரி, யார் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, அரசாங்கத்தை நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லை என அவர் நினைவு கூர்ந்தார். வீதிகள், பாலங்கள், அணைகள் கட்டுதல், பேருந்துகள், ரயில்கள் கொள்வனவு செய்தல் போன்ற அனைத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடனின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டன.
இந்த கடனை அடைக்க முடியாமல் மீண்டும் கடனை பெறுவது சிரமமாக உள்ளதாகவும், அரசாங்கத்தை நடத்தும் செலவுக்கு வருமானம் இல்லாததால், அவர்கள் பணத்தை அச்சிட்டு அந்த செலவுகளை மேற்கொண்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், நிதியமைச்சர் மற்றும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி, பொருளாதார மாற்ற சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் 02 வாரங்களுக்கு மேல் இயங்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.