புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் மியான் அல்தாப் அகமது முன்னிலை வகிக்க, மெகபூபா முப்தி தற்போது அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தற்போது அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 2.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் (National Conference) மியான் அல்தாப் அகமது முன்னிலை வகிக்கிறார். மெகபூபா முப்தி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கிறேன். பிடிபி தொண்டர்கள், தலைவர்களின் கடின உழைப்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி.
எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதியாகும், மேலும் எங்களைத் தடுக்க முடியாது. மியான் அல்தாப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.