ஆந்திராவின் முதல்வராக இருந்த ராஜசேகர் ரெட்டி மறைவுக்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் ரோசய்யாவை முதல்வராக்கியது. இதில் கடுப்பான ஜெகன் காங்கிரஸில் இருந்து வெளியேறி ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ் என்கிற தனி கட்சியையும் தோற்றுவித்தார். 2014-ம் சட்டமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்ட போதும் 2019-ல் வெற்றிபெற்றார். இதற்கிடையில் ஜெகனுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரின் அம்மா விஜயம்மா, சகோட்ர்ஹரி ஷர்மிளா ஆகியோர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இருந்து பிரிந்தனர். பிறகு 2021-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்னும் புதிய கட்சியையும் தோற்றுவித்தார், ஷர்மிளா.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது பலத்தை உணர்ந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உடனடியாக ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பையும் வழங்கியது. இந்த சூழலில்தான் ஆந்திராவில் இருக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இதில் ஜெகன், ஷர்மிளா இடையிலான போட்டியில் ஏற்கெனவே ஆட்சியை பறிகொடுத்த சந்திரபாபு நாயுடுவும் இணைத்து கொண்டார். அவருக்கு பா.ஜ.கவும், பவன் கல்யாணும் கை கொடுத்தனர். இதனால் ஆந்திரா அரசியல் களத்தில் அனல் தகிக்க ஆரம்பித்தது.
இதையடுத்து எளிதாக வெற்றி கனியை ருசிக்க முடியாது என உணர்ந்த ஜெகன் பிரசாரங்களை தீவிரப்படுத்தினார். இதற்காக ‘ஆந்திராவுக்கு ஜெகன் ஏன் தேவை’ என்கிற கோஷத்தை முன்னிறுத்தி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பதிலுக்கு சந்திரபாபு நாயுடு ‘ஆந்திரம் ஏன் ஜெகனை வெறுக்கிறது’ என்கிற கோஷத்தை கையில் எடுத்தார். தேர்தல் முடிவுகள் எண்ண தொடங்கியது முதலே சந்திரபாபு நாயுடுவின் பக்கம் தான் காற்று வீசியது.
மாலை 4 மணி நிலவரப்படி ஆந்திரப் பிரதேச சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சி 123 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21, பாஜக 7 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. மறுபக்கம் ஒய்எஸ்ஆர்சிபி 24 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தெலுங்கு தேசம் 15 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. ஒய்எஸ்ஆர்சிபி 4 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெகனின் தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசிய அரசியல் நோக்கர்கள், “ஜெகன், ஷர்மிளா இடையேயான மோதல் மட்டும் இதற்கு காரணம் இல்லை. மாநிலம் ரூ.13.5 லட்சம் கோடி கடனில் இருக்கும்போது நவரத்னாலு எனப்படும் விரிவான நலத்திட்டங்களை மக்கள் விரும்பவில்லை. போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாது, நம்பகத்தன்மையற்ற மின்சாரம், குடிநீர் பற்றாக்குறை, அதிக மின் கட்டணம், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளால் வாக்காளர்கள் விரக்தியடைந்துள்ளனர். கூடுதலாக, ஜெகன் மோகனின் வேலை உருவாக்கம் பற்றிய வாக்குறுதி பெரும்பாலும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுவும் மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபோன்ற சவால்களுக்கு மத்தியில் ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால், சரியான வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியவில்லை. பல்வேறு காரணங்களினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து 14 சிட்டிங் எம்.பி.க்கள் மற்றும் 37 எம்.எல்.ஏ.க்களை நீக்கினார். இந்த நடவடிக்கை தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரவலான அதிருப்திக்கு வழிவகுத்தது. சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது மாநில திறன் மேம்பாட்டுக் கழகம் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். நாயுடுவின் சிறைவாசம் இரண்டு மாதங்கள் நீடித்தது. இது அவருக்கு மக்கள் மத்தியில் அனுதாப அலையை உருவாக்கியது. இதுதான் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தோல்வியை பரிசாக கொடுத்திருக்கிறது” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88