மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் இறுதிச் சுற்றுப்போட்டிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் (30) இடம் பெற்றது.
அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ண இறுதிச் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக ஆண், பெண் அணியினர் வெற்றியை சுவீகரித்தனர்.
மட்டக்களப்பிலுள்ள பிரதேச செயலகங்கள், அரச திணைக்களங்களுக்கிடையிலான எட்டு ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாருக்கும் போட்டிகள் இடம் பெற்றது.
ஆண்களுக்கான போட்டியில் மட்டக்களப்பு வலய கல்வி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 07 ஓவர்கள் முடிவில் 107 ஓட்டங்களைப் பெற்றுள்ள நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியினர் 43 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் மட்டக்களப்பு வலயக்கல்வி அணியினர் 64 மேலதிக ஓட்டங்களால் வெற்றியை தமதாக்கி கொண்டனர்.
பெண்களுக்கான போட்டியில் மட்டக்களப்பு வலயக்கல்வி A மற்றும் B அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற B அணி முதலில் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய A அணியினர் இறுதி ஓவர் வரை துடுப்பெடுத்தாடி 41 ஓட்டங்களை பெற்று முதலிடத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக முன்னால் மாவட்ட அரசாங்க அதிபர் களான மா.உதயகுமார், கலாமதி பத்மராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
இறுதி நாள் நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.