கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அவர் தெரிவித்தது. “இண்டியா வென்றது. மோடி வீழ்த்தப்பட்டார். எண்ணிலடங்கா கொடுமைகளை செய்தனர். தேர்தலில் பெரிய அளவில் பணத்தை செலவிட்டனர். இருந்தும் மோடி மற்றும் அமித் ஷாவின் ஆணவம் அவர்களை வீழ்த்தியது. அயோத்தியிலும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பிரதமர் மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். இந்த முறை தேர்தலில் 400+ இடங்களை வெல்லும் என்று கூறிய அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என மம்தா தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட்டது. இருந்தாலும் மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் என தெரிவித்துள்ளது.