kangana Ranaut: `சனாதனத்துக்குக் கிடைத்த வெற்றி…' – இமாச்சலில் வெற்றி வாகை சூடிய கங்கனா ரனாவத்!

2024 மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கிய பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 73,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் வேட்பாளரும், 6 முறை முதல்வராக இருந்து மறைந்த வீரபத்ர சிங்கின் மகனும், ராம்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான விக்ரமாதித்ய சிங் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

கங்கனா

காங்கிரஸ் கட்சியின் மறைந்த முதல்வர் வீரபத்ர சிங்கின் கோட்டையாக இருந்த மாண்டி தொகுதியை, அவரது மறைவுக்குப் பிறகு, பா.ஜ.க கைப்பற்றிக்கொண்டது. 2014, 2019 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் பா.ஜ.க-வின் ராம் ஸ்வரூப் ஷர்மா, காங்கிரஸின் வீரபத்ர சிங்கின் மனைவி, பிரதிபா சிங்கை தோற்கடித்து, பா.ஜ.க-வை உறுதிப்படுத்தினார். ஆனால், 2021-ல் ராம் ஸ்வரூப் ஷர்மா மரணமடைந்ததைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில், மீண்டும் பிரதிபா சிங், மாண்டியைக் கைப்பற்றினார்.

இந்த நிலையில்தான், 2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. மாண்டி தொகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடப்போவதாக பா.ஜ.க தலைமை அறிவித்ததையடுத்து, காங்கிரஸ் எம்.பி பிரதிபா சிங், இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார்.

கங்கனா ரனாவத்

இந்த நிலையில்தான், ‘அரசியல் புதுமுகம்’ கங்கனா ரனாவத் பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கி 5,27,463 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். தனது வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில், பிரதமர் மோடியின் படத்தைப் பகிர்ந்து, “எனக்கான இந்த ஆதரவுக்கும், அன்புக்கும் நம்பிக்கைக்கும் மாண்டிவாசிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த வெற்றி பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க மீதான நம்பிக்கைக்கும் கிடைத்தது. இது சனாதனத்துக்கும், மாண்டியின் பெருமைக்கும் கிடைத்த வெற்றி” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.