உலக சுற்றாடல் தின நிகழ்விற்காக ஒதுக்கப்படும் பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

எதிர்வரும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினத்தின் தேசிய கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் இந்த வேளையில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களை அந்த நிலையில் இருந்து மீட்பதே இத்தருணத்தில் அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அரசாங்கம் என்ற வகையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க ஆரம்பித்துள்ளோம். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ள நிலைமை சீரானவுடன் அந்த பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். மேலும் சேதமடைந்துள்ள பாலங்கள், வடிகாண்கள், வீதிகள் ஆகியவற்றைப் புனரமைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளும் உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் நலனுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளன. இந்த நடவடிக்கையில் பணத்தை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் தேவையான பணிகளை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

ஆனால் இந்த நேரத்தில் சிலர் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கின்றனர். ஆனால் நடக்க வேண்டியது அதுவல்ல. இந்த நேரத்தில் விமர்சனங்களை விட முக்கியமானது இடம்பெயர்ந்த மக்களை விடுவிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதுதான்.

மேலும், வெள்ள நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் அதனை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பது அவசியம். அதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் எவ்வாறான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், நாளை (04) முதல் 10 நாட்களுக்குள் உள்ளூராட்சி மன்றங்களில் இதுவரை நிரந்தர நியமனம் பெறாத 8400 ஊழியர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தி நிரந்தர நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தைக் குழப்புவதற்கு ஒரு குழுவினர் செயல்படுவதையும் நாம் அறிவோம். எனவே, எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உலக சுற்றாடல் தினத்தின் தேசிய விழாவை ஜூன் 05 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த விழாவை இரத்து செய்து, அந்த நிதி ஒதுக்கீட்டை மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆனாலும் உலக சுற்றாடல் தின தேசிய விழாவிற்காக நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் செடிகளை நடும் பணியை நாம் முன்னெடுக்கவுள்ளோம். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செடியை நட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.’’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.