லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஜெய்வீர் சிங், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிவ்பிரசாத் யாதவ் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் 22,1639 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் பா.ஜ.க. வேட்பாளர் ஜெய்வீர் சிங் 3,76,887 வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து டிம்பிள் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மெயின்புரி தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மெயின்புரி தொகுதியின் வளர்ச்சிக்கு சமாஜ்வாடி கட்சி முன்னுரிமை அளிக்கும். உத்தர பிரதேச மக்கள் பா.ஜ.க.விற்கு பாடம் கற்பித்துள்ளனர். மோடியின் ஆணவத்தை அடக்குவதில் இவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். சமூகத்தின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.