தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு இத்தாலிய பிரதமர் மெலோனி வாழ்த்து

ரோம்: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி .

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இத்தாலி மொழியில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், தேர்தல் வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியா – இத்தாலி நாடுகளுக்கு இடையேயான நட்பை வலுப்படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து செயல்படும். நம் தேசங்களின், நம் மக்களின் நலனுக்கான பல்வேறு விஷயங்களிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று (ஜூன் 4) நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பாஜக தனித்து 240 இடங்களிலும் என்டிஏ கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும், இண்டியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றன. இந்தச் சூழலில் தான் இத்தாலி பிரதமர் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.

வைரலான செல்ஃபி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியுடன், பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்கொண்ட, ‘செல்பி’ படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் நடந்த ஐ.நா.,வின் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி உலகத் தலைவர்களை சந்தித்து பேசினார். அந்த வகையில் மாநாட்டில் பங்கேற்ற, இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனியையும் பிரதமர் சந்தித்தார். பிரதமர் மோடி அவருடன் செல்பி படம் எடுத்துக் கொண்டார்.

இந்தப் படத்தை, தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட மெலோனி, ‘பருவநிலை மாறுபாடு மாநாட்டில் சிறந்த நண்பருடன்’ எனக் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், ‘மெலோடி’ என்ற வார்த்தையையும் அவர் பயன்படுத்தினார். அந்த செல்ஃபி வைரலானது, #மெலோடியும் ட்ரெண்டானது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.