பாஜகவின் தேர்தல் வெற்றியை கொண்டாடிய இலங்கை அமைப்புகள் @ யாழ்ப்பாணம்

ராமேஸ்வரம்: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்தும் அங்குள்ள அமைப்புகள் கொண்டாடின.

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 293 தொகுதிகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பாஜகவின் தேர்தல் வெற்றியை இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிவசேனை, உருத்திரசேனை, உலக சைவ திருச்சபை உள்ளிட்ட அமைப்புகள் கொண்டாடின. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பைரவர் ஆலயத்தில் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டு, பட்டாசுகள் வெடித்தும் பாஜகவின் வெற்றியினை கொண்டாடினர்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் , உருத்திரசேனை, உலக சைவ திருச்சபை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது, ‘மீண்டும் இந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடிக்கு ஆசி வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அவர் இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி இலங்கை மக்களுக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி.சுவாமி விவேகானந்தருக்கு அடுத்தபடியாக உலகளவில் இந்துத்துவ தத்துவங்களை எடுத்துச் சென்றதில் நரேந்திர மோடி வெற்றி கண்டிருக்கிறார். அரேபிய நாடான துபாயில் கூட அவரது முயற்சியால் இந்து ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் 1987-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய – இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் படி 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமின்றி இஸ்லாமிய மக்களும் எதிர்பார்கின்றனர். மேலும் இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைக்கும் அவர் ஆக்கப்பூர்வமான தீர்வினை தர வேண்டும். நரேந்தி மோடி பிரதமர் பதவியேற்றதும் இலங்கைக்கு வருகை தர வேண்டும்,’ என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.