பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இல்லை? ஜெய்ஸ்வால் களமிறங்குகிறார்?

India vs Pakistan: டி20 உலகக் கோப்பை 2024ன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் துவங்கி உள்ளது. புதன்கிழமை அயர்லாந்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. நியூயார்க்கில் ஜூன் 9 தேதி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா – தென் ஆப்பிரிக்கா அணிக்கு இடையே இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 

எனவே ரோஹித் சர்மா மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார். இது இந்திய அணிக்கு பெரிதும் உதவியது. ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் கைகொடுக்க அயர்லாந்தை வெறும் 96 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்திய அணி. எளிதான இலக்கை எதிர்த்து களமிறங்கிய இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 52 ரன்கள் அடித்து இருந்த நிலையில், 8-வது ஓவரில் ஜோஷ்வா லிட்டில் பந்துவீச்சில் ரோஹித் காயம் அடைந்தார். பந்து பவுன்ஸ் ஆகி கையில் அடிபட்டது. அதன் பின்பு சிறிது நேரம் பேட்டிங் பிடித்தாலும் வலி தாங்க முடியாமல் பெவிலியின் திரும்பினார்.

இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா தனக்கு இன்னும் கையில் வலி இருப்பதாக தெரிந்து இருந்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி இதே வீரர்களுக்கு களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓப்பனிங் இறங்கி விளையாட வேண்டும் என்று தான் பிசிசிஐயும் விரும்புகிறது. எனவே பாகிஸ்தான் போட்டியிலும் ஜெய்ஸ்வால் விளையாட மாட்டார் என்று தான் கூறப்படுகிறது.

ஒருவேளை காயம் காரணமாக ரோஹித் விலகும் பட்சத்தில் ஜெய்ஸ்வால் களமிறங்கி வாய்ப்புள்ளது. பங்களாதேஷுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் 3வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடியுள்ளார். பந்த் நம்பர் 3 இடத்தில் தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டதால் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் பேட்டிங் செய்கிறார். அதன் பிறகு ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆல்ரவுண்டர்களாக இருப்பார்கள். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் சிராஜ், பும்ரா, அர்ஷ்தீப் சிங் நிச்சயம் அணியில் இடம் பெறுவர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் உதவினால் சிராஜுக்குப் பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.