புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. பாஜக கூட்டணி 293 இடங்களிலும் இண்டியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.
பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதம ராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் நேற்று மாலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பட்டியலை ஒப்படைத்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம், அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 17-வது மக்களவையை கலைக்க உத்தரவிட்டார். தற்போது அமைவது 18-வது மக்களவை ஆகும்.