சென்னை: விருதுநகர் தொகுதியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்என்று தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு கொடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று கூறியதாவது:
விருதுநகரில் மொத்தம் 10.61 லட்சம்ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதில் விஜயபிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக கூறுகின்றனர். தபால் வாக்குகள் எண்ணப்பட்டதற்கு பிறகுதான் விஜய பிரபாகரன் 0.4 சதவீத வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பல லட்சம்வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தால் ஒப்புக்கொண்டு இருப்போம். ஆனால், திட்டமிட்டு சூழ்ச்சியால் அவரை தோல்வியடைய செய்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.
ஆட்சியருக்கு நிர்பந்தம்: வாக்கு எண்ணிக்கையின்போது மாலை3 முதல் 5 மணி வரை 2 மணி நேரம்வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அதற்கான காரணம் கூறப்படவில்லை. பல்வேறு தரப்பிலும் இருந்து தனக்கு நிர்பந்தங்கள் அதிகமாக இருக்கிறது. தன்னால் சமாளிக்க முடியவில்லை. செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்யப்போகிறேன் என்று தேர்தல் அலுவலரானமாவட்ட ஆட்சியர் கூறுகிறார். அவரை செயல்படவிடாமல் தடுத்தது யார்?
தேர்தல் முடிவு அறிவிக்கும் முன்பாகவே, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது என்று முதல்வர் கூறினார். எதன் அடிப்படையில் இவ்வாறு கூறினார் என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின்போது தவறு நடப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முறையிட்டார். தேமுதிக, அதிமுக நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால், அதை அதிகாரிகள் ஏற்கவில்லை.
எனவே, விருதுநகரில் மறு வாக்குஎண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சலில் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவோம். அதிமுக – தேமுதிக கூட்டணி வரும் காலங்களிலும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார். தேமுதிக செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘விருதுநகர் மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகள் நடந்ததாக குறிப்பிட்டு, தேர்தல்ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளோம். அப்போதே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் விருதுநகர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் புகார் மனு அனுப்பினோம். தங்களுக்கு மனு வரவில்லை என்று கூறியதால் நேரடியாக அளித்துள்ளோம். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடமும் நேரடியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.
இந்நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவின்படி இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று தெரிவித்துள்ளார்.