புதுடெல்லி: மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி. இந்தச் சூழலில் புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டுமென்ற நிபந்தனைகள் எதுவும் தெரிவிக்கவில்லை என லோக் ஜன சக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
அவரது கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் 2 முதல் 3 இடங்கள் வேண்டுமென பாஜக வசம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்தச் சூழலில் அப்படி எதுவும் இல்லை என சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
“அது அனைத்தையும் நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். எங்கள் தரப்பில் இருந்து எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஏனெனில், எங்கள் இலக்கு பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக அரியணையில் அமர வைப்பது தான். எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இதில் நேர்மையாக செயல்பட்டுள்ளன. அமைச்சரவையை ஒதுக்கீடு செய்வது பிரதமரின் கைகளில் தான் உள்ளது. அதனால் அதில் எந்த நிபந்தனையும் இல்லை” என அவர் தெரிவித்தார்.
சமஸ்திபூர், ஹாஜிபூர், வைஷாலி, ககரியா மற்றும் ஜமுவாய் ஆகிய ஐந்து மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றுள்ளது சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி.
“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு எப்போதும் பாஜக செவி கொடுக்கும். 2018-ல் நாங்கள் முன்னெடுத்த போராட்டத்துக்கு பாஜக அரசு கவனம் கொடுத்தது.
அதே போல தேர்தலில் பெரிய அளவிலான வெற்றியை எதிர்பார்த்து அதை எட்ட முடியாத சூழலில் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கம். எந்தவொரு அரசும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.
கடந்த 70 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ஒருவர் பிரதமர் ஆவது இதுவே இரண்டாவது முறை. புதன்கிழமை அன்று நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் அனைவரும் தன்னை அணுகலாம் என பிரதமர் மோடி தெரிவித்தார். வரும் 2029 தேர்தலில் என்டிஏ கூட்டணி 400+ இடங்களில் வெல்லும் என நான் உறுதியாக உள்ளேன்” என அவர் தெரிவித்தார்.