Third Gender Reservation: `தனியாக 1% இடஒதுக்கீடு!' வென்றது நர்ஸிங் மாணவியின் சட்டப் போராட்டம்!

மூன்றாம் பாலினத்தவருக்கு இனி நல்ல காலம். ‘கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மூன்றாம் பாலினத்தவருக்கென பிரத்யேகமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை 12 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்ற காலக்கெடுவையும் உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

ரக்ஷிகா ராஜ் என்கிற திருநங்கை தொடர்ந்திருந்த வழக்கில், வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை நீதியரசர் இளந்திரையன் வழங்கியுள்ளார்.

இந்த வழக்கின் பின்னணி என்ன… இதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று ரக்ஷிகா ராஜிடம் பேசினோம்…

ரக்ஷிகா ராஜ்

‘‘பாலினம் அடிப்படையில் ஒருவர் திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ, இதயலிங்கத்தவராகவோ (பாதிப்பாதி அடையாளம் கொண்டவர்களை இதயலிங்கத்தவர் என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது, பெண்ணுறுப்பை உருவகப்படுத்த இதயம் என்கிற வார்த்தையையும், ஆணுறுப்பை உருவகப்படுத்த லிங்கம் என்கிற வார்த்தையையும் கலந்து இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது) அடையாளம் காணப்பட்டால், அவர்களை MBC என்கிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்கும் வகையில் சட்டம் உள்ளது. திருநர்களுக்கென எந்த உதவிகளும் கிடைக்காத காலத்தில், அவர்களை MBC பிரிவில் சேர்த்து அவர்களுக்கான உரிமைகளைப் பெற அரசு வழிவகை செய்திருந்தது. ஆனால், அதில் ஜாதி அடிப்படையிலான உரிமையும், இட ஒதுக்கீடும் பறிபோகிறது.

நான் நர்ஸிங் படித்து முடித்துள்ளேன். அடிப்படையில் அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவள். இப்போது எனக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்றால், MBC இட ஒதுக்கீட்டில் உள்ள பெண்களுடன் நான் போட்டி போட வேண்டும். SC/ST பெண்களுக்குக் கிடைக்கும் உரிமைகளோ, சலுகைகளோ எனக்குக் கிடையாது.

பாலினம் வேறுபடுவதன் ஒரே காரணத்தால் எனக்கான உரிமை பறிபோயுள்ளது. இதேபோல் பல திருநர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். எனவே, அந்தந்த ஜாதி இடஒதுக்கீட்டில், திருநர்களுக்கென ஒரு சதவிகித உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

திருநர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் உள்ளது. இந்த மாபெரும் தீர்ப்பினை வழங்கிய நீதியரசர் இளந்திரையன் அவர்களுக்கும், இந்த வழக்கில் எனக்காகப் போராடிய வழக்கறிஞர் தன்விக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்’’ என்று மனம் நெகிழ்கிறார்.

வழக்கறிஞர் தன்வி

வயதில் மிகவும் இளைஞர்தான் வழக்கறிஞர் தன்வி. ஆனால், தன்னுடைய அழுத்தமான வாதங்களால், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பைப் பெற்று, திருநர்களின் வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாழ்த்துகளுடனும் பாராட்டுகளுடனும் வழக்கறிஞர் தன்வியிடம் பேசியபோது….

‘‘மத்திய அரசின் சட்ட உதவி மையமான NALSA என்கிற அமைப்பு, மூன்றாம் பாலின உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்திருந்தது.

‘ஒருவர் தன்னை திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ, இதயலிங்கத்தவராகவோ அடையாளப்படுத்திக் கொள்வது அவரது தனிப்பட்ட உரிமை. அந்தப் பாலின அடையாளத்தை அரசு ஏற்றுக் கொண்டால்தான் அவர்களுக்கான நியாயமான உரிமைகள் கிடைக்கப்பெறும். குறிப்பாக, Horizontal reservation அடிப்படையில் அனைத்து ஜாதிகளுக்குள்ளும் 1% சதவிகித உள் ஒதுக்கீடு திருநர்களுக்கு வழங்க வேண்டும்‘ என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிபதி இளந்திரையன்

ரக்ஷிகா ராஜ் தொடர்ந்திருந்த வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முன்வைத்தே வாதாடினோம். SC/ST என்கிற சான்றிதழ் வைத்திருக்கும் திருநர், தனக்கான உரிமைகளைப் பெற முடியும். அதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. ஆனால், சாதிச்சான்றிதழ் இல்லாத ஒரு திருநர் MBC பிரிவினராகவே கருதப்படுவார். இந்தப் பிரச்னையை மையமாக வைத்தே உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்தினோம். கர்நாடகாவில் திருநர்களுக்கான 1% சதவிகித உள் ஒதுக்கீடு நடைமுறை ஏற்கெனவே பின்பற்றப்படுவதையும் சுட்டிக் காட்டினோம்.

பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த உயர் நீதிமன்றம் தற்போது சிறப்பான இந்தத் தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் மூலம், கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு இயற்றியிருந்த MBC இட ஒதுக்கீட்டு சட்டத்தையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அரசியல் சாசனத்தின் 14, 15, 16, 19, 21 பிரிவுகளை மீறுவதாக காரணத்தையும் விளக்கியிருக்கிறது. இதன்மூலம் திருநர்களுக்கென கல்வி, வேலைவாய்ப்பில் நியாயமான உரிமைகள் கிடைக்கும். தமிழக அரசும் 1% உள் ஒதுக்கீடு இந்தச் சட்டத்தை இயற்றத் தயாராக உள்ளதாகவே தெரிவித்துள்ளது. எனவே, நல்ல செய்தி வரும் என்று காத்திருக்கிறோம்’’ என்றார் தன்வி நம்பிக்கை பொங்க!

நல்லது நடக்கட்டும் !

-ஜி.ஸ்ரீவித்யா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.