நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் 1,000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் (RO) (ஜூன் 05) கல்கமுவ, பலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் நிறுவியுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் நிதியுதவியுடன் கடற்படையால் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்ட புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் தேசிய லொத்தர் சபையின் தலைவர் கலாநிதி சமீர சி யாப்பா அபேவர்தன ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015 ஆம் ஆண்டு, மெதவாச்சி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கடவத் ரம்பேவ பிரதேசத்தில் முதலாவது நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டதன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டமானது வடமாகாணத்தில் 161, வடமத்திய மாகாணத்தில் 340, வடமேற்கு மாகாணத்தில் 149 ,மத்திய மாகாணத்தில் 54 மேல் மாகாணத்தில் 10, சப்ரகமுவ மாகாணத்தில் 13, தென் மாகாணத்தில் 22, ஊவா மாகாணத்தில் 155, கிழக்கு மாகாணத்தில் 92 மற்றும் பெரிய கப்பல்களில் 04 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அடங்கலாக இதுவரை ஆயிரம் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சமூக பணித்திட்டம் சுத்தமான குடிநீர் இல்லாத மக்களுக்கு சுத்தமான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும், நீண்டகால சிறுநீரக நோய் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான நீரினை வழங்குவதற்காகவும் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2017 ஆம் ஆண்டில், சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்ய தேவையான மருத்துவ தர நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை உருவாக்கும் பணியை கடற்படை தொடங்கியதுடன், இதுவரை 25 அரசு மருத்துவமனைகளில் 26 மருத்துவ ரீதியிலான நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன என கடற்படை மேலும் தெரிவித்தது.
நாடு முழுவதும் சுத்தமான குடிநீர் வசதிகளை நிறுவும் இத் திட்டத்தினை இலங்கை கடற்படை அரச மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது.