சென்னை: “ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்றுக்கொண்டே இருக்கும் பெங்களூரு ஆர்சிபி அணியைப் போன்றது பாஜக. ஆனால், அதிமுக சென்னை சூப்பர் கிங்ஸ். 30 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். பல வெற்றிகளைக் குவித்தோம். இனிவரும் தேர்தலில் வெற்றிகளை குவிப்போம். வரலாற்று சாதனையாக அது இருக்கப்போகிறது. அதற்கு இடையில் நொதி கஞ்சி போல் அண்ணாமலை ஏன் குதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக குறித்த அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜக தலைவர் அண்ணாமலையைப் பொறுத்தவரை, ஒரு புள்ளி ராஜா ஆகிவிட்டார். எதற்கெடுத்தாலும் புள்ளி விவரங்களைக் கூறி வருகிறார். யார் யார் எவ்வளவு வாக்கு வாங்கினார்கள் என்ற விவரங்களைக் கூறி வருகிறார். இதுபோன்ற புள்ளி விவரங்களை எடுக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகத்தான் அவர் செயல்பட்டாரே தவிர, ஒரு கட்சியினுடைய தலைவராக அவருடைய பேச்சுக்கள் இல்லை.
சரி அண்ணாமலை பேசுகிறாரே, அவருக்கு அந்த முகாந்திரம் இருக்கிறதா? என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். 2014-ல் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. அன்றைக்கு பாஜகவுடன் பாமக உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணியில் இருந்தனர். அந்த தேர்தலில் பாஜக கூட்டணி வாங்கியதைவிட, இந்த தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது. இதை ஏன் அண்ணாமலை சொல்ல மறந்தார்? 2014 தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பாஜகவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் வாக்குகள் குறைந்திருக்கிறது. அப்படி என்றால், பாஜக எப்படி 10 ஆண்டுகளில் வளர்ந்திருக்க முடியும்.
தமிழகத்துக்கு பாஜகவினர் 8 முறை பிரதமர் மோடியை அழைத்து வந்தனர். மறைந்த தலைவர் மூப்பனார், ராஜீவ்காந்தியை அழைத்து வந்தார். அவர்களுக்கு ஒரு 23 இடங்களில் வெற்றி கிடைத்தது. ஆனால், பிரதமரை 8 முறை அழைத்து வந்தும்கூட, ஒரு இடத்தில்கூட பாஜக வெற்றி பெறவில்லையே. அவர்கள் வலுவாக இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதேபோல், அவர்களது கூட்டணியில் உள்ள பாமக தருமபுரியில் வலுவாக இருக்கக்கூடிய தொகுதி, அங்கேயும் தோற்று போய்விட்டனர்.
எனவே, அதிமுகவுக்கு டெபாசிட் போய்விட்டது அதுஇது என்று கதையைக் கட்டுவதைவிட, பாஜகவின் வளர்ச்சி என்னவென்று பார்த்தால், ஒரு வளர்ச்சியும் கிடையாது. சுருக்கமாக சொல்வது என்றால், ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்றுக்கொண்டே இருக்கும் பெங்களூரு ஆர்சிபி அணியைப் போன்றது பாஜக. ஆனால், அதிமுக சென்னை சூப்பர் கிங்ஸ். 30 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். பல வெற்றிகளைக் குவித்தோம். இனிவரும் தேர்தலில் வெற்றிகளை குவிப்போம். வரலாற்று சாதனையாக அது இருக்கப்போகிறது. அதற்கு இடையில் நொதி கஞ்சி போல் அண்ணாமலை ஏன் குதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை”, என்று அவர் கூறினார்.