நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டியதில் 3 வீடுகள் சேதமடைந்தன. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 103 மி.மீ. மழை பதிவானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடைமழை நின்றிருந்த நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் பெய்து வரும் மழையால் மேற்கு தொடர்ச்சி மலைகள் நிறைந்த குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டியது. நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, களியக்காவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், திற்பரப்பு, களியல், மயிலாடி, இரணியல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது.
அதிகபட்சமாக கொட்டாரத்தில் 103 மி.மீ., மழை பெய்தது. குருந்தன்கோட்டில் 91 மி,மீ., நாகர்கோவிலில் 78 மி.மீ., மைலாடியில் 74 மி.மீ., குளச்சலில் 66 மி.மீ., மழை பதிவானது. மேலும் இரணியல் 58, சிற்றாறு ஒன்றில் 40, திற்பரப்பில் 36, முள்ளங்கினாவிளையில் 32 மி.மீ., மழை பெய்தது. கனமழைக்கு மாவட்டம் முழுவதும் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் இல்லை. தொடர் மழையால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி ஆகியவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
பரளியாறு, பழையாறு, வள்ளியாறு மற்றும் ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. ஜூன் மாத துவக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் குமரி மாவட்ட மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று 45.19 அடியாக இருந்தது. அணைக்கு 670 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்த நிலையில் 535 கனஅடி நீர் வெளியேறி வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.8 அடியாக உள்ளது. அணைக்கு 529 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. சிற்றாறு ஒன்றில் 15.97 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு 109 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு இரண்டு அணையில் 16.07 அடி தண்ணீர் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 15 அடியாக உள்ளது.