திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சர்க்கார் (விதார்த்), தன் மனைவி சரசு (வாணி போஜன்), பள்ளி செல்லும் மகன் அருந்தவம் (கிரிதிக் மோகன்) மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் மகன் அருந்தவம், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுகிறார். மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மகனுக்கும், அவரது குடும்பத்திற்கும் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட `மருத்துவக் கல்விக்கான தகுதித் தேர்வு’ பெரும் தடையாக உருவெடுக்கிறது. குடும்பத்தில் இழப்பும் ஏற்படுகிறது. இந்தத் தடைகளை எதிர்த்து அருந்தவமும், வழக்குரைஞர் மாணிக்கமும் (ரகுமான்) எப்படிப் போராடுகிறார்கள் என்பதைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமனின் `அஞ்சாமை’.
குடும்பத்தின்மீது பாசமிக்கவராகவும், மகனின் கனவுகளுக்காக ஓடும் தந்தையாகவும், மகன் உடையும் பொழுதெல்லாம் துணை நிற்கும் பொறுப்புமிக்க வழிகாட்டியாகவும் யதார்த்தமாக ஸ்கோர் செய்கிறார் விதார்த். சின்ன சின்ன முகபாவனைகளில் எமோஷனல் காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறார். எமோஷனலாக ஏற்றயிறக்கங்கள் உள்ள அருந்தவம் கதாபாத்திரத்தை முடிந்தளவிற்கு அந்தப் பருவ வயதிற்கான மீட்டரில் திரையில் தோன்றி கவனிக்க வைக்கிறார் கிரித்திக் மோகன். சண்டை போடுவது, அழுவது தவிர வாணி போஜனுக்குப் பெரிய வேலையில்லை. நேர்மையான காவல் அதிகாரியாகவும், பொறுப்புள்ள வழக்கறிஞராகவும் இரு பரிமாணங்களில் மிடுக்கான தோற்றத்தில் ரகுமான். நீதிமன்றத்தில் வசனங்களை ‘ஒப்பிப்பதில்’ கவருபவர், அழுத்தமான காட்சிகளை தன் முதிர்ச்சியான நடிப்பால் மெருகேற்றத் தவறுகிறார். ரேகாவும், பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்-ம் தேவையான பங்களிப்பைத் தர, ராமர் ஒரு சில இடங்களில் மட்டும் தலைகாட்டுகிறார்.
ஒட்டுமொத்தமாகவே திரையாக்கமும், திரைமொழியும் அப்டேட் ஆகாத பாணியிலேயே இருக்கிறது. இதனால் கார்த்திக்கின் ஒளிப்பதிவு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எமோஷனலான தருணங்களை நீட்டி முழக்கி சுவாரஸ்யமில்லாமல் ஆக்கிவிடுகிறது ராம்சுதர்சனின் படத்தொகுப்பு. ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்களிலும் அதே பழங்கால பாதிப்புதான். திரையை ‘நிரப்பும்’ கலாசரனின் பின்னணி இசை, சில காட்சிகளுக்கு மட்டுமே கைகொடுத்திருக்கிறது. மேடை நாடகம், கிராமத்து வீடு, கோச்சிங் மையங்கள், தேர்வு மையங்கள், நீதிமன்றம் என ஜி.சி.அனந்தனின் கலை இயக்கம் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
சர்க்காரின் மேடை நாடகம், குடும்ப நிலை, மகனுக்காக மேடை நாடகத்தைத் துறக்கும் தந்தை, சாமானிய கிராமத்து விவசாயி எனத் தொடக்கத்தில் சிறிது சுவாரஸ்யத்தோடே நகர்கிறது திரைக்கதை. அரசுப் பள்ளிகளின் சிறப்பு, தனியார்ப் பள்ளிகளின் பேராசை, தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதிலுள்ள கடினங்கள் தொடங்கி, பயிற்சி மையங்களின் கொள்ளை, தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதிலுள்ள நிர்வாக ரீதியிலான அலட்சியங்கள், அதனால் பாதிப்பிற்கு உள்ளாகும் மாணவர்கள் எனப் பல ‘செய்திகளை’ ஆவணப்படுத்துவதோடு, சம்பந்தப்பட்ட அரசையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்கிறது படம். ஆனால், இவற்றை எல்லாம் அதீத நாடகத்தன்மை கொண்ட திரைக்கதையுடன் சொல்வதால், முழுக்கவே சுவாரஸ்யமற்றதாக மாறிவிடுகிறது படம்.
அடுக்கடுக்கான எமோஷனல் தருணங்கள், அதற்கான நிதானத்தோடு இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இவற்றைத் தகவல்களாக மட்டுமே நம்மால் எடுத்துக் கொள்ள முடிகிறது என்பது ஒட்டுமொத்தமாகப் படத்தின் ஆக்கத்திலிருக்கும் சிக்கலை வெளிக்காட்டுகிறது. தகுதித் தேர்வு மையங்களில் நடக்கும் அக்கிரமங்களை மையப்படுத்திய இடைவேளை காட்சியை யூகிக்க முடிந்தாலும், இரண்டாம் பாதிக்கான கதை நகர்வுக்கு அது வலுசேர்த்திருக்கிறது.
மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்குப் பின்னால் உள்ள அரசியல், அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, அதனால் பாதிக்கப்படும் சாமானியர்கள் எனப் பல கட்டுடைப்புகளையும், கேள்விகளையும் காத்திரமாகவே பேசுகிறது இரண்டாம் பாதி. ஆனால், நீதிமன்றத்திலும் நாடகத்தன்மையே வழிந்தோடுகிறது. அதுவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திருவிழா கால நாடக பாணியில் இரண்டு வழக்குரைஞர்கள் விவாதித்துக்கொள்வதும், அங்கே இருப்பவர்கள் அதைக் கைக்கட்டி ரசித்துப் பார்ப்பதும் என அதுவே ஏதோ கலை நிகழ்ச்சி கணக்கான பிம்பத்தை உண்டாக்குகிறது.
ஒரு கட்டத்தில் தகுதித் தேர்வுக்கு எதிரான விவாதங்களிலிருந்து விலகி படம் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. தேர்வு மையங்கள் அமைப்பதில் நிகழ்ந்த நிர்வாகச் சிக்கல் தொடங்கித் தேர்வுகள் அடங்கிய தற்கால கல்விமுறை வரை பல பிரச்னைகளை மிக்ஸியில் அடித்து ஒரே படத்தில் பேச முயன்றிருக்கின்றனர். அதனால், தகுதித் தேர்வுகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை விளக்கும் காட்சிகள் வீரியம் இழந்து நிற்கின்றன. மேலும், சாதி இல்லா சான்றிதழ் வாங்குவதை ஊக்குவிக்கும் வசனங்கள் பெரிய மைனஸ்!
பெரும்பாலான இடங்களில் தெளிவான அரசியலும் பிரச்னைகளுக்கு எதிரான வாதமும் முன்வைக்கப்பட்டாலும் அவுட்டேட்டான திரைமொழியால் இந்த `அஞ்சாமை’ அயற்சியை மட்டுமே தருகிறது.