சென்னை: “மக்கள் நலன் சார்ந்த கூட்டுறவுத்துறையின் அறிவிப்புகளை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்,” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத்துறையின் சட்டப்பேரவை அறிவிப்புகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த காலங்களில் வெளியான கூட்டுறவுத்துறை அறிவிப்புகளின் தற்போதை நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிதாக வெளியிட வேண்டிய அறிவிப்புகள் குறித்தும் ஆலோசித்தார்.
அதன்பின் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: “கடந்த காலங்களில் அரசின் திட்டங்கள், பொங்கல் பரிசு தொகுப்பு, நிவாரண தொகை வழங்குதல் போன்ற சிறப்பு அறிவிப்புகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணியையும் கூட்டுறவுத்துறை செய்துள்ளது பாராட்டுக்குரியது.
வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், துறை சார்பில் வெளியிட உள்ள அறிவிப்புகள் மக்கள் நலன் சார்ந்ததாகவும், அரசுக்கும் மக்களும் பாலமாக விளங்கும் வகையில் அமைய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல், வரும் கூட்டத் தொடரிலும் வெளியிடப்படும் அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்ற முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும்.
அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, துரிதமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும்,”என்று அமைச்சர் அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை செயலர் கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன்.கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஜெ.விஜயராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.