புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து புது டெல்லியில் இன்று நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் கூட்டணி எம்பிக்களின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
என்டிஏ-வின் இந்த முக்கிய முடிவை அடுத்து, பாஜக மூத்த தலைவரான எல்கே அத்வானியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து, பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் மோடி அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து முரளி மனோகர் ஜோஷி வாழத்து தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பை அடுத்து, டெல்லியில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை பிரதமர் மோடி அவரது இல்லத்தில் சந்தித்தார். மோடியை வாசலுக்கு வந்து வரவேற்ற ராம்நாத் கோவிந்த், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, என்டிஏ-வின் மூத்த உறுப்பினர்களான நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன் சென்று நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திப்பார் என கூறப்படுகிறது. அப்போது, என்டிஏ எம்பிக்களின் ஆதரவு கடிதத்தைக் கொடுத்து அவர் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
இதனிடையே, புதிய அரசில் கூட்டணி கட்சிகளுக்கு உள்ள பிரதிநிதித்துவம் தொடர்பாக அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வரும் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார் என்று பாஜக மூத்த தலைவர் பிரகலாத ஜோஷி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.