சுரங்கத்தில் பதுங்கியிருந்த 5 இஸ்ரேல் வீரர்களை கொன்றுவிட்டோம்: ஹமாஸ் தகவல்

காசா:

காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் அக்டோபர்-7 தாக்குதக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இந்த போரில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி மக்கள் என சுமார் 36,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதேபோல் மேற்கு கரையில் நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

போரினால் இடம்பெயர்ந்த மக்கள், பள்ளிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை ஐ.நா. அமைப்பு மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்குகின்றன. இந்த இடங்களும் அவ்வப்போது தாக்குதலுக்கு இலக்காகின்றன. அவ்வகையில், இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த பள்ளியின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ரபா நகரின் அருகே இஸ்ரேல் படைகளால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயிலை தகர்த்ததாகவும், இந்த தாக்குதலில் சுரங்கப்பாதையில் பதுங்கியிருந்த 5 இஸ்ரேலிய வீரர்களை கொன்றதாகவும் ஹமாஸ் அமைப்பின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு கூறி உள்ளது.

இந்த சுரங்கப்பாதையின் நுழைவாயில் காசா முனையின் தெற்கு பகுதியில் ரபா நகரின் மேற்கில் உள்ள தால் ஜுரோப் அருகில் இருந்ததாக அல்-கஸ்ஸாம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக, இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இதேபோல், ரபா நகரில் இயங்கும் இஸ்ரேல் ராணுவ அலுவலகத்தை தாக்கியதாகவும் அல்-கஸ்ஸாம் கூறியிருக்கிறது.

முன்னதாக, ரபாவின் கிழக்கே காசா-இஸ்ரேல் எல்லை வேலியை தாண்டி செல்ல முயன்ற 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.