புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியஅவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். நாளை இரவு 7.15மணி அளவில் நடைபெறும் விழாவில், 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த கூட்டணி சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியே பொருத்தமானவர். கடந்த 10 ஆண்டுகளில் அவரது நேர்மை, திறமையை நாட்டு மக்கள் அறிந்து கொண்டனர். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவிக்கு மோடியின் பெயரை பரிந்துரை செய்கிறேன்” என்று முன்மொழிந்தார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி தலைவர் சிராக் பாஸ்வான், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி, அப்னா தளம் (எஸ்) தலைவர் அனுபிரியா படேல், ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் இதை வழிமொழிந்தனர்.
நிறைவாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, அரசியலமைப்பு சாசன புத்தகத்துக்கு தலைவணங்கி மரியாதை செலுத்திய மோடி,அதை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டார். தொடர்ந்து, எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்தியில் ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை பலம் தேவை. அதேநேரம், நமது நாட்டை வழிநடத்த கருத்து ஒற்றுமை அவசியம். தற்போதுமத்தியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த கூட்டணி 5 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று உறுதிபட கூறுகிறேன்.
வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ், பால் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என்டிஏ கூட்டணியை உருவாக்கினர். அந்த கூட்டணி இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. நல்லாட்சி என்ற ஒற்றை மந்திர சொல்லில் கூட்டணி நிலைத்திருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளும் மத்தியில் என்டிஏ கூட்டணி ஆட்சி நடத்தும்.
கடந்த 4-ம் தேதி வாக்கு எண்ணும்நாளில் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. ஆனால், மக்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து 3-வது முறையாக மத்தியில்ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கி உள்ளனர். என்டிஏ அரசு பதவியேற்பதை தடுக்க இண்டியா கூட்டணி தலைவர்கள் பல வகைகளில் முயற்சி செய்தனர். அவர்களது முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) குறித்து இண்டியாகூட்டணி தலைவர்கள் தொடர்ந்து பல சந்தேகங்களை எழுப்பினர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பணிகளுக்கு இடையூறு செய்தனர்.
தேர்தலுக்கு பிறகு இவிஎம் இயந்திரங்களுக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் ஒரேயடியாக மூடுவிழா நடத்திவிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது இவிஎம்குறித்து அவர்களால் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மவுனமாகிவிட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ்கட்சியால் 100 மக்களவை தொகுதிகளில்கூட வெற்றி பெற முடியவில்லை.
கடந்த 10 ஆண்டுகால என்டிஏ ஆட்சி வெறும் டிரெய்லர் மட்டுமே என்று ஏற்கெனவே கூறினேன். இப்போதும் அதே கருத்தை முன்வைக்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் பாரத மாதாவுக்கு சேவையாற்றுவேன். 140 கோடி மக்களின் கனவுகளை நனவாக்கபாடுபடுவேன். புதிய இந்தியா, வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பின்னர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி,எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு, ஆட்சி அமைக்க அவருக்கு அழைப்பு விடுத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை (ஜூன் 9) இரவு 7.15 மணிக்குநடைபெறும் விழாவில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்கிறது. 3-வது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். அவருடன் முக்கிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளதாக மோடி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி என பெருமிதம்: தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: வடஇந்தியா – தென்னிந்தியா என்ற பிரிவினைவாத கொள்கையை எதிர்க்கட்சிகள் பின்பற்றுகின்றன. இதை என்டிஏ வெற்றிகரமாக முறியடித்துள்ளது. தென்னிந்தியாவில் என்டிஏ புதிய அரசியலை தொடங்கி உள்ளது.
கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் ஆட்சி அமைத்தது. ஆனால், அந்த 2 மாநிலங்களிலும் மக்கள் காங்கிரஸை புறக்கணித்து, என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். கேரளாவில் முதல்முறையாக பாஜக காலூன்றி உள்ளது.
தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு இத்தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும், அங்கு என்டிஏ வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் என்டிஏவுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.