- அடுத்த மூன்று வருடங்களில் இளைஞருக்கான சிறந்த நாடு கட்டியெழுப்பப்படும் -ஜனாதிபதி.
பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், எந்த தலைவர் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டாலும் மேற்படி இணக்கப்பாட்டுடன் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, சரியான திட்டத்துடன் செயற்பட்டால் மாத்திரமே சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
ஜா-எல – ஏக்கல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Cephalosporin ஊசி மற்றும் மெல்டோல் மருந்து உற்பத்தி தொழிற்சாலையை (06) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தாார்.
மெல்வா கூட்டு நிறுவனத்தின் கீழ் Sands Active தனியார் நிறுவனத்தினால் இந்த உற்பத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிறுவனத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்துவைத்த பின்னர் ஜனாதிபதி தொழிற்சாலையை மேற்பார்வையிட்டார்.
இதன்போது மெல்வா கூட்டு வியாபாரத்தின் தலைவர் பெரியசாமிபிள்ளை ஆனந்தராஜாவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.
எதிர்காலம் நிலையற்றததென நினைக்கும் இளையோருக்காக அடுத்த மூன்று வருடங்களில் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பல்வேறு துறைகளின் ஊடாக தேசிய பொருளாதாரத்திற்கு மெல்வா நிறுவனம் பங்களிப்புச் செய்து வருகின்றமைக்காக மெல்வா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அதனால் இந்நாட்டு இளையோருக்கு பல தொழில்வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“இன்று, Sands Active தனியார் நிறுவனம் மெல்டோல் எனும் புதிய மருந்து வகையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது தலைவலிக்கான மருந்தாகும். இந்த மருந்து உற்பத்திச் சாலைக்குள் புதிய மருந்து வகையை உற்பத்திச் செய்வதற்கான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மருந்துகளை மீள் கொள்வனவு செய்வதற்கான வசதிகள் இருக்க வேண்டுமென வலியுறுத்தினார். அதன் பலனாகவே இன்று இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்படுகிறது.
இதன்மூலம் உள்நாட்டு சந்தைக்கு மருந்து விநியோகிக்கும் தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Sands Active தனது உற்பத்தியில் ஒரு பங்கை ஏற்றுமதி செய்யவும் ஆரம்பித்திருக்கிறது.
பெருமளவான தொழிற்சாலைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். அவர்கள் மேலும் ஏற்றுமதியை நோக்கி நகர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். இது ஒரு உதாரணமாக மட்டுமே உள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் வகையிலான பல்வேறு நிறுவனங்களையும், வியாபாரங்களையும் மெல்வான நிறுவனம் ஆரம்பித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் இந்த குழுமம் வெகுவாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அது சிறந்த வளர்ச்சியாகும்.
இந்த தொழிற்சாலைகள் வாயிலாக இளைஞர் யுவதிகளுக்கான பல தொழில் வாய்ப்புக்கள் உதயமாகியுள்ளன. இவ்வாறான நல்ல தொழில் துறைகள் நாட்டுக்கு அவசியம். தொழில் இன்மை நாட்டின் பெரும் பிரச்சினையாகியுள்ளது. குறைந்த வருமானம் பெறுவோரும் பெருமளவில் உள்ளனர். கொவிட் பரவல் – பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் புதிய தொழில்துறைகள் உருவாகவில்லை. 04 வருட தொழில் இன்மை பிரச்சினை உக்கிரமடைந்திருக்கிறது.
அதனால் தொழில் இன்மை மற்றும் வாழ்க்கைச் செலவை குறைக்கும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளோம். 2019 ஆம் ஆண்டில் புள்ளிவிவரத் திணைக்களம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 15 – 25 சதவீதம் வரையில் நாட்டின் வறுமை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் இளையோருக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும். இளையோருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதே எமது முதற் கடமையாகும். அதற்காக நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற வேளையில் நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையிலிருந்து மீண்டு வர 05 – 06 வருடங்கள் ஆகலாம் என்று பலரும் கூறினர். எதிர்காலம் இருக்காது என்று அஞ்சி பலரும் நாட்டை விட்டுச் சென்றனர். இருப்பினும் இரு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது.
எந்த அளவு கஷ்டங்கள் இருந்தாலும், பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், சிறிது காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி வலுவான வாழ்க்கைச் சூழலை கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்பட்டது. அதற்காகவே வற் வரி அதிகரிக்கப்பட்டது. அதனால் மக்கள் திட்டித் தீர்த்தனர். ஆனாலும் இரு வருடங்கள் முடியும் முன்பாகவே ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல முடிந்தது.
கடந்த காலங்களில் நல்ல அறுவடை கிடைத்தது. நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வர ஆரம்பித்தனர். நாட்டு மக்களின் முயற்சியினாலும், அரசாங்கத்தின் சரியான வேலைத்திட்டத்தின் பயனாகவும் முன்னோக்கிச் செல்ல முடிந்திருக்கிறது. நாட்டின் உண்மை நிலையை மறந்து விட்டு வேடிக்கை பேச்சு பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
நாட்டில் உண்மையைான அரசியல் நிலைமை தொடர்பில் பேச முடியாதிருப்பதாலும், அதற்கு தீர்வு தேட முடியாத நிலை காணப்படுவதாலும் இளையோர் அரசியலில் இருந்து விலகியுள்ளனர். அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடிக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இன்னும் சில மாதங்களில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம். அதனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டாது. ஒரே இடத்தில் இருந்தால் நாம் மீண்டும் வீழ்ந்துவிடுவோம். அதனால் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
நாம் முன்னோக்கிச் செல்வதற்காக போலி வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. பலரும் போலி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் எம்மீது பல பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதனைப் புரிந்துகொண்டு போலி வாக்குறுதிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும்.
தற்போது அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்புச் சட்டத்தை சமர்பித்துள்ளது. அதற்குள் பல இலக்குகள் உள்ளன. 2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 5 சதவீதமான காணப்பட வேண்டும். இதுவரையில் பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானத்திலேயே காணப்படுகிறது. அதனால் 2027 இற்குப் பின்னர் 8 சதவீத வளர்ச்சியை நோக்கி நகர வேண்டிய தேவையும் உள்ளது.
நாடு அபிவிருத்தி அடையும் போது 15 வருடங்களுக்கு 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். பல நாடுகள் அபிவிருத்தி கண்டுள்ளன. சீனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளும் அபிவிருத்தியை நோக்கிச் செல்கின்றன.
நாட்டின் தொழில் இன்மை பிரச்சினையை 2025 ஆம் ஆண்டளவில் 5 சதவீதமாக மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். 2040 களில் நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரம் காணப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காக இதனைச் செய்ய முடியுமென இணக்கப்பாட்டை எட்ட வேண்டும். அந்த இணக்கப்பாடுகளையும் சட்டமாக்குவோம்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், எந்த தலைவர் நாட்டை பொறுப்பேற்றாலும் அந்த இலக்குகளை நோக்கி நகர வேண்டியது அவசியம். அதனால் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான முதல் அடியை வைத்திருக்கிறோம். அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் நாட்டின் இளையோருக்கு நல்ல நாடு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவோம்.
அதற்காக மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இன்று கிராமப்புற மக்களின் வருமானம் குறைவாக உள்ளது. நவீன விவசாயத்தின் மூலம் விவசாய ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.
இப்போது நாட்டில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. சுற்றுலாத்துறை மூலம் வருடத்திற்கு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க எதிர்பார்க்கிறோம். அதற்கு தற்போதைய ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை போதாது. எனவே, புதிய ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
மேலும், சுற்றுலா வர்த்தகத்திற்கான கடன் வசதிகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் தொழிற்பயிற்சித் துறைகள் தனியார் துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு நிகழ்காலத்திற்கு ஏற்ற தொழில் வல்லுநர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். குறிப்பாக தகவல் தொழிநுட்பத் துறைக்கு, டிஜிட்டல் துறையை மேம்படுத்த அரசாங்கம் பணம் வழங்க முடியும். இதற்கு முன்வரும் இளைஞர்களுக்கு நாம் உதவ வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப அறிவு பெற்ற 23,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் உருவாகிறார்கள். இந்த எண்ணிக்கையை 50,000 ஆக அதிகரிக்க வேண்டும். புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளையும் இந்நாட்டிற்கு வரவழைக்க வேண்டும். அதற்காக 10,000 ஏக்கர் முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை முகாமைத்துவம் செய்ய தனி அதிகார சபை உருவாக்கப்படும்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 3000 ஏக்கரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 1500 ஏக்கரும், திருகோணமலையில் 4000 ஏக்கரும் முதலீட்டு வலயமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் நாட்டில் 10,000 ஏக்கர் வர்த்தக வலயங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் பெரும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
யத்தத்திற்குப் பிறகு வியட்நாம் அதன் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிந்தது. இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளும் இந்தப் பொருளாதாரப் பயணத்தில் செல்ல முடிந்தது. எப்பொழுதும் பிச்சைக்காரர்களின் தேசமாக நாம் வாழ முடியாது. இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். அதற்கு ஒரு நாடாக நாம் சுயமான பலத்துடன் எழுந்து நிற்க வேண்டும். ” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,
“இலங்கையர்களுக்கு மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு வைத்தியர் ராஜித சேனாரத்னவினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன்று, மெல்வா குழுமம் அவர்களின் முக்கிய வர்த்தகத்தில் மட்டுமல்ல, இலங்கைக்கு மிகவும் முக்கியமான தொழில்களிலும் பிரவேசிப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், “நான் இந்த நாட்டை காப்பாற்ற முயற்சி எடுத்ததனால், இனிமேலும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருக்க வேண்டியதில்லை” என்று ஜனாதிபதி இங்கு வரும் முன்பாகவே என்னிடம் சொன்னார். அதன்படி, ஜனாதிபதி இதுவரை நாட்டிற்காக ஆற்றிய பணிகளுக்காக அனைவரும் ஜனாதிபதியை பாராட்ட வேண்டும்.
மெல்வா நிறுவனம் தொடர்ந்தும் இலங்கையில் முதலீடு செய்யும் என நான் எதிர்பார்க்கின்றேன. அவர்களை வாழ்த்துவது எனது கடமையாகும். மேலும் இந்த நிறுவனம் தொடர்ந்து வலுவடைந்து நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிக்கும் என்று நம்புகிறேன்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ராஜித சேனாரத்ன, இஷாக் ரஹ்மான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, மெல்வா குழுமத்தின் தலைவர் பெரியசாமிப்பிள்ளை ஆனந்தராஜா, மெல்வா நிறுவனத்தின் பணிப்பாளர்களான அனுபர் செகர், விகாசன் முருகானந்தன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.