டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் குருபாஸ் 56 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான இப்ராஹிம் சத்ரான் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த அஸ்மத்துல்லா 22 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இருப்பினும் கடினமான பிட்ச் என்பதால் ஆப்கானிஸ்தான் எடுத்த 159 ரன்கள் நியூசிலாந்து அணிக்கு சவாலான ஸ்கோராகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடியபோது, நியூசிலாந்து அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. குறிப்பாக, குருபாஸ், இப்ராஹிம் சத்ரான் கொடுத்த பல வாய்ப்புகளை வீண்டித்தனர். மூன்று கேட்சுகள், ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன்அவுட் வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்டனர். இதுதான் ஆப்கானிஸ்தான் வலுவான ஸ்கோரை நோக்கி செல்ல முக்கிய அடித்தளமாக அமைந்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியின் துல்லியமான பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் சீட்டுக்கட்டுகள் போல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டது. ஆரம்பத்திலேயே ரன் கணக்கை தொடங்காமல் பின் ஆலன் விக்கெட்டை விட்ட நியூசிலாந்து அணியால் கடைசி வரை நிமிரவே முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டு, வெறும் 75 ரன்களுக்கு சுருண்டது.
இதனால் நியூசிலாந்து அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. நியூசிலாந்து அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்தளவுக்கு ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 15.2 ஓவர்கள் மட்டுமே விளையாடியது நியூசிலாந்து அணி. ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் ரஷித் கான், ஃபரூக்கி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது நபி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.