ட்ரோன்கள் பறக்க தடை: மோடி பதவியேற்பு விழாவுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?

புதுடெல்லி: நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக நாளை (ஜூன் 8) பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய்ப்பட்டு வருகிறது. ட்ரோன்கள் பறக்கத் தடை, எல்லைகளில் கண்காணிப்பு, போக்குவரத்து மாற்றம் எனப் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டதை அடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய அவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். நாளை இரவு 7.15மணி அளவில் நடைபெறும் விழாவில், 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர், என்எஸ்ஜி கமாண்டோக்கள், ட்ரோன்கள், ஸ்னைப்பர்கள் என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜி20 மாநாடு பாணியில்.. நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகள் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு டெல்லியில் ஜி20 மாநாடு நடந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு அம்சங்கள் இப்போதும் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும் உலகத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வர பிரத்யேக வழித்தடம் அமைக்கப்படுகிறது. அந்தப் பாதை முழுவதும் ஸ்நைப்பர்களும், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். நகரில் முக்கியமான பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான், நேபாள், மொரீஷியஸ், செசல்ஸ் தீவுகள் தலைவர்களுக்கு பிரதமர் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள் லீலா, தாஜ், ஐடிசி மவுரியா, க்ளாரிட்ஜெஸ், ஓபராய் ஆகியன பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் மாளிகையில் டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆயுதங்கள், உத்திகள் படைப் பிரிவான ஸ்வாட் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2500 காவலர்கள், 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு, டெல்லி ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

போக்குவரத்தில் மாற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை ஒட்டி டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. நகரின் பல பகுதிகளில் இருந்தும் மத்திய டெல்லி செல்லும் பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.