கோடம்பாக்கத்தின் எலிஜிபிள் பேச்சிலராகச் சுற்றி வந்தவர் பிரேம்ஜி. எனவே இவரது சகோதரர் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட இவரது குடும்பத்தினர் யாரை பார்த்தாலும் ரசிகர்கள் கேட்கும் முதல் கேள்வி “பிரேம்ஜிக்கு எப்போ கலயாணம்’ என்பதே.
ஒருவழியாக அந்தக் கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. நாளை திருத்தணி முருகன் கோவிலில் வைத்து பிரேம்ஜி சேலத்தைச் சேர்ந்த இந்து என்பவர் கழுத்தில் தாலி கட்ட இருக்கிறார். திருமணத்தைக் கோயிலில் வைத்து முடித்து விட்டு வரவேற்புக்கு எல்லாருக்கும் சொல்லி விடலாமென நினைத்திருந்தனர் குடும்பத்தினர்.
ஆனால் திருமணப் பத்திரிக்கை எப்படியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி விட, ஆளாளுக்கு தகவல்களை அள்ளித் தெளிக்கத் தொடங்கி விட்டனர். பிரேம்ஜிக்குப் பார்த்திருக்கும் பெண்ணும் நடிகைதான் என்பதில் தொடங்கி அவரது புகைப்படமென ஏதோவொரு போட்டோவையும் பகிர்ந்தனர் சிலர். இதனால் நொந்தே போன பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
‘திருமணம் முடிந்த பிறகு நாங்களே மணமக்கள் போட்டோக்களை அனுப்புகிறோம். அதுவரை பொறுங்கள். நடிகை அது இது என எதையாவது வைரலாக்காதீர்கள்’ என அதில் வேண்டுகோள் வைத்திருந்தார். இந்நிலையில், பிரேம்ஜியை மணக்க இருக்கும் பெண் குறித்து எக்ஸ்க்ளூசிவான சில தகவல்கள் நமக்குக் கிடைத்தன. பிரேம்ஜி குடும்பத்தினருக்கு நெருக்கமான சிலரிடம் இது தொடர்பாகப் பேசிய போது, ”இந்துவின் குடும்பம் சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்டது.
இந்து வங்கி ஒன்றில் வேலை பார்த்துட்டு வர்றாங்க. இந்தக் கல்யாணம் காதல் கல்யாணம்தான். ரெண்டு பேரும் எங்க எப்படி அறிமுகமானாங்கனு தெரியலை. அதேநேரம் இந்துதான் பிரேம்ஜிகிட்ட முதல்ல புரப்போஸ் செய்ததாச் சொல்றாங்க. கொஞ்ச நாள் காதலிச்சவங்க பிறகு வீட்டுல விஷயத்தைச் சொல்ல ரெண்டு வீட்டாரும் பேசி நல்லதொரு முடிவை எடுத்திருக்காங்க” என்றார்கள்.
திருமணத்தைத் திருத்தணியில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டதும் இந்துதானாம். அவரது விருப்பப் படியே செய்ய பிரேம்ஜி வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே, நாளை நடக்கவிருக்கிறது கல்யாணம். வாழ்த்துகள் பிரேம்ஜி – இந்து!