பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இரண்டு நாள்களுக்கு முன்பு சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்துக்காக தான் அவரை அடித்ததாக குல்விந்தர் கவுர் தெரிவித்தார். இச்சம்பவத்தில் கங்கனா ரனாவத்தை அடித்த குல்விந்தர் கவுருக்கும் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனால் கங்கனா ரனாவத் அதிர்ச்சியடைந்துள்ளார். கங்கனாவை அடித்த பெண் கான்ஸ்டபிளுக்கு தொழிலதிபர் ஒருவர் ஒரு லட்சம் சன்மானம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். மற்றொரு இசையமைப்பாளர் பெண் கான்ஸ்டபிளுக்கு வேலை கொடுக்க தயாராக தெரிவித்துள்ளார். கங்கனாவை அடித்த பெண் கான்ஸ்டபிள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் அளித்துள்ள பேட்டியில், ”எனது தாயின் மரியாதைக்காக 1000 வேலைகளைக்கூட இழக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். குல்விந்தர் கவுர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவருக்கு பாராட்டு விழா நடத்த பஞ்சாப் விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. கங்கனா தாக்கப்பட்டதற்கு பாலிவுட்டில் கூட யாரும் பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதனால் பாலிவுட்டை கங்கனா கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் தன்னை அடித்த பெண் கான்ஸ்டபிளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”ஒவ்வொரு கொலைகாரன், திருடன், வன்கொடுமையில் ஈடுபடுபவனுக்கும் குற்றத்தில் ஈடுபட உணர்வு பூர்வமாக , உடல் ரீதி எதாவது ஒரு காரணம் இருக்கும். எந்த ஒரு குற்றமும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை. அப்படி இருந்தும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனை கொடுக்கப்படுகிறது. நீங்கள் குற்றவாளியுடன் உணர்வு பூர்வமாக இணைந்திருந்தால் குற்றம் செய்வதற்காக அனைத்து சட்டத்தையும் மீற தூண்டப்படுவார்கள்.
ஒருவரின் அந்தரங்கப் பகுதிக்குள் நுழைந்து, அவர்களின் அனுமதியின்றி, அவர்களின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரியாக இருந்தால், நீங்கள் வன்கொடுமை அல்லது கொலை செய்தாலும் பரவாயில்லை என்று சொல்வீர்களா? குற்றங்களுக்கான காரணங்களை உளவியல் ரீதியாக பார்க்கவேண்டும். நீங்கள் எல்லாம் யோகா மற்றும் தியானத்தை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் வாழ்க்கை கசப்பான மற்றும் சுமை நிறைந்த அனுபவமாக மாறும். இவ்வளவு வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவற்றைச் சுமக்க வேண்டாம், தயவுசெய்து உங்களை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88