கோவை: ”கல்விச் சீர்திருத்தம் செய்வதற்கு தடையாக உள்ள சிந்தனைகளை எதிர்கொண்டு, பாரதத்தின் பாரம்பரிய கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும்” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கோவையில் ‘புதிய பாரதத்தில் கல்வி சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார். தமிழக உயர் கல்வி ஆசிரியர் சங்கம், கேரள மாநில ஆசிரியர் சங்கம் மற்றும் டெல்லி அகில பாரதிய ராஷ்ட்ரிய சாக்‌ஷிக் மகாசங்க ஆசிரியர் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: ”உலகளவில் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், நானோ தொழில்நுட்பம் ஆகியவை அனைத்துத் துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் அறிவு சார்ந்த வளர்ச்சி மிகவும் முக்கியமாகும்.