காதலர்கள் முதன்முறை சந்திப்பதற்கு முன்… ரொமான்டிக் சாட், வீடியோ கால்… எல்லை என்ன?!

ஆகாஷும் ஜீவிதாவும் இப்போதுதான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது காதலின் ஆரம்பம் என்பதால் இருவருக்குமிடையே விடிய விடிய சாட்டிங் ஓடிக் கொண்டிருக்கிறது. சாட்டிங் போரடித்ததும், `என் வீட்டில் இரவு… அங்கே இரவா… இல்லை பகலா?’ என சங்கீத ஸ்வரங்கள் பாடல் போல இரவெல்லாம் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். நரம்புகள் தீ மூட்டுகிற வயதில் காதல் செய்வதால், காதலன்றி ஒரு நொடியையும் நகர்த்துவதில்லை.

“ஓய்… உன் நெனப்பாவே இருக்குடி…’’

“இங்க மட்டும் என்னவாம். எதைப் பாத்தாலும் நீதான்டா கண்ணு முன்னாடி வந்து நிக்குறே!’’

“உன் காது இருக்குல்ல காது… அதுல குட்டியா ஒரு தோடு போட்டிருப்பேல்ல… ‘’

“ஆமா… அதுக்கென்ன இப்ப?’’

“அந்த தோடு இருக்குற இடத்துல நான் இருக்கணும்டி. கொஞ்சிக் கொஞ்சிப் பேசிட்டே இருப்பேன் ஹஸ்கி வாய்ஸ்ல…’’

“போன வாரம்லாம் கண்ணுக்கு இமையா இருக்கணும்னு சொன்னே… இப்ப தோடுகிட்ட வந்துட்டியா?’’

Love Chat

– காலையில் தூங்கி எழும்போது ஆரம்பித்து மீண்டும் இரவு தூங்கச் செல்லும் வரை சாட்டிங், போன் கால்களில் பேசியவை போக மீதம் இருக்கும் நேரங்களில் தான் இதர வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பல் துலக்கும் போது, குளிக்கும் போது, சாப்பிடும் போது என எந்த வேலையைச் செய்தாலும் அனிச்சையாய் அவர்களை அறியாமல் சிரிக்கிறார்கள். இருவரின் உடைகளும் சீராக மாறியிருக்கிறது. இருவரின் புன்னகைகளிலும் புத்துணர்ச்சி பூத்திருக்கிறது. இருவரின் நடையிலும் கம்பீரம் கூடியிருக்கிறது. நெஞ்சோரத்தில் முளைத்திருக்கும் இந்த காதலின் ஆற்றல் இருவரின் உலகையும் இன்னும் அழகாக்கியிருக்கிறது.

’`உன்னோட ட்ராவல் வீடியோஸ்லாம் பாப்பேன்… ரொம்பப் பிடிக்கும்’’ என்று ஜீவதா ஏதேச்சையாக ஆகாஷைப் பாராட்ட ஆரம்பித்ததுதான் முதல் அறிமுகம். பின், மெதுமெதுவாக இருவருமே நல்ல நணபர்களாகியிருந்தார்கள். ஒரு பூ மலர்கிற தருணத்தை எப்படி அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாதோ அப்படித்தான் இருவரின் காதலும் அவர்களே அறியாத நொடியொன்றில் மிக அழகாய்ப் பூத்திருந்தது.

“ஆகாஷ்… உன்ன லவ் பண்ணுவேன்னு நினைச்சுக் கூட பாக்கலடா. இதோ… இப்ப இந்த நிமிஷம்கூட யோசிச்சுப் பாக்குறேன். அந்த மொமென்ட்தான் புரியலை…’’

“எனக்கும் புரியலைடி. ரெண்டு பேருக்கும் வேவ்லெங்த் செட் ஆகி… அது அப்டியே லவ் ஆகிருச்சு. இதெல்லாம் மேஜிக் மாதிரிதான் தோணுது.’’

Romantic Chat

“ஏய் இப்போலாம் உன்கூட பேசவே வெட்கம் வெட்கமா வருதுடா…’’

“வெட்கம்லாம் மொத்தமா சேர்த்து வைடி. உன் கண்ணப் பார்த்து பேசுவேன் ஒருநாள். அன்னைக்குக் காட்டு உன் வெட்கம்லாம்.’’

’`ச்சீ போடா பொறுக்கி… என் வெட்கத்தை பாத்துட்டு நீ சும்மா இருந்துடுவியா?’’

– விடிய விடிய நடக்கும் இவர்களின் காதல் பேச்சுகளில் தாறுமாறாக வந்துவிழுந்தன ரொமான்ஸ் வார்த்தைகள்.

“நாம பேசுறதையெல்லாம் டெலீட் பண்ணாம பத்திரமா வச்சிப்போமா?‘’ – சாட்டிங் செய்து முடித்த பின் கிடைக்கிற சிறிய இடைவெளிகளில் கூட ஒவ்வொரு மெசெஜ்களையும் திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்தார்கள். இருவரும் எப்போது சந்திப்பதென்பதே பெரிய திட்டமிடலாக இருந்தது. இதுவரை நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளவில்லை. ஆனாலும், காதல் மனங்களின் நெருக்கத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் அருகில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

“ஏய் தூங்கலாமா?’’

“ஒரு டைட் ஹக் வேணும்டி. என் மூச்சுக் காத்து உன் காதுமடல்கள் மேல படுற அளவுக்கு நெருக்கமா கட்டிப் பிடிச்சிட்டே தூங்கணும்’’ – ஆகாஷ் இப்படிக் கேட்டதும் ஜீவிதாவிடம் சில நிமிட மௌனம். இதுவரை சாட்டிங்கிலும் போனிலும் பேசியவை எல்லாம் இருவருக்குமிடையே மெல்லுணர்வுகளை மட்டுமே கடத்திக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது ஆகாஷ் கேட்டதும் அவன் அணைப்பையும், சூடான மூச்சுக் காற்றின் வெப்பத்தையும் தன் காதுமடல்களில் குவிக்கத் தொடங்கியிருந்தாள். இமைகள் மூடி விர்ச்சுவல் உலகில் அவனோடு எல்லாமுமாக வாழத் தொடங்கியிருந்தாள்.

’சாப்பிட்டியா? தூங்குனியா? உன்னைப் பாக்கணும் போல இருக்குடி’ போன்ற மெல்லிய விசாரிப்புகளைத் தாண்டி, கரங்கள் பற்றி, கட்டியணைத்து, முத்தமிட்டு மூர்ச்சையாகிற வரை வெட் சாட்டிங் போதையில் இருவரும் அடிமையாகிப் போனார்கள். நாளடைவில் இந்த வெட் சாட்டிங்கிலும் திரும்பத் திரும்பப் பேசிய வர்ணனைகளே மீண்டும் வந்தன. எதிர்முனையில் அடுத்து என்ன பதில் வரும் என்பதை இருவருமே சுலபமாகக் கணித்துக் கொண்டார்கள்.

Video call

“ரொம்ப போரடிக்குது. வீடியோ கால் பேசலாமா?’’ என்று ஆரம்பித்தபோது இருவரின் எதிர்பார்ப்புகளின் அளவும் கொஞ்சமும் கூடாமல் அப்படியேதான் இருந்தது. `லவ் யூ, மிஸ் யூ, கிஸ் யூ, ஹக் யூ’ தாண்டி ஆயிரம் முறைக்கு மேலாவது வார்த்தைகளிலேயே வெட் சாட்டிங் முடித்திருந்தபோது, இருவரும் முகம் பார்த்துக் கொள்வதில் சுவாரசியம் இல்லாமல் இருந்தார்கள்.

“ஹாய்… வீடியோ கால்ல ஃபர்ஸ்ட் டைம் பேசுறோம்ல…’’

“ஆமா… நீ ரொம்ப அழகு…’’

“நீயும் தான்…’’

இருவரும் கண்கள் பார்த்துதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெரிய சுவாரசியம் இல்லை. ஜீவிதா ஸ்லீவ்லெஸ் உடையில் க்ளீவேஜ் தெரியும்படி படுத்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறாள். ஆனாலும், எப்போதும் போல சின்ன சிரிப்புடன் கண்டும் காணாதது போல் அதைக் கடந்துவிட்டுப் பேசிக் கொண்டிருந்தான் ஆகாஷ். தான் அவ்வாறான உடையில் இருப்பது குறித்த எந்தவித ப்ரக்ஞையும் இல்லாமல் ஜீவிதாவும் மிகச் சாதாரணமாகவே பேசிக் கொண்டிருக்கிறாள். இருவருக்குமான காதல் மிகச் சில வாரங்களுக்குள்ளாகவே உச்சம் தொட்டு நீர்த்துப் போயிருந்தது.

காதல்

`உன்னை இப்பவே பாக்கணும் ‘ என்று ஆரம்பத்தில் தவியாய்த் தவித்தவர்களின் பேச்சில் இப்போது நேரில் சந்தித்துக் கொள்வதற்கான ஆர்வம் மெதுவாகக் குறைய ஆரம்பித்திருந்தது. வெட் சாட்டிங், வீடியோ கால் என எல்லா வழிகளிலும் விதவிதமாகப் பேசி முடித்த பின்பு இருவரும் சந்திப்பதற்கான சூழலும் வாய்த்தது. அன்று இருவரும் சந்தித்த வேளையில் கட்டியணைத்தார்கள். பரஸ்பரம் முத்தமிட்டுக் கொண்டார்கள். இருவரும் பகிர்ந்துகொண்ட பரிசுப் பொருள்களை நிதானமாய்ப் பிரித்துப் பார்த்து மகிழ்ந்தார்கள். ஆனால், முதல் காதலின் முதல் சந்திப்பில் பறக்க வேண்டிய வண்ணத்துப் பூச்சிகளை இருவருமே அப்போது தவறவிட்டிருந்தார்கள். காபி குவளைகளில் காதல் நிரம்பாமல் காபி மட்டுமே நிரம்பியிருந்தது. இருவரின் அணைப்பிலும் வெப்பத்தின் அளவு குறைந்திருந்ததை இருவருமே உணர்ந்தார்கள்.

“என்னமோ தெரில… நம்ம ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ற மாதிரி ஃபீல் வரலையில..?’’

“எனக்கு என்னவோ நாம பல வருஷத்துக்கு முன்னாடியே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரிதான் ஃபீல் ஆகுது…’’

“உன்னை முதன்முதலா பாக்குற அன்னைக்கு உன் நெத்தியில கிஸ் பண்ணனும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. ஸாரிடி மறந்துட்டேன்…’’

“நான் உன் கண்ணைப் பார்த்து நேருக்கு நேரா` ஐ லவ் யூ’ சொல்லணும்னு நினைச்சேன்.. நானும் மறந்துட்டேன்..’’

– இருவரின் பேச்சுகளும் `தேமே’வென நகர்ந்துகொண்டிருந்தன. கொண்டாடித் தீர்க்க வேண்டிய முதல் சந்திப்பு, நிழலுலக இன்பத்தைக் கூட தராமல் போனது இருவருக்குமே வருத்தம் தான். கடமைக்குக் கைகள் பிடித்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் கைகூடி வந்த பின்பும் ஏதொவொன்றின் இழப்பு இருவரையுமே வாட்டியது.

சிறுகச் சிறுகச் சேமித்து காலம் முழுக்க நீடித்து இழுத்துச் செல்ல வேண்டிய காதலை சல்லடையில் பிடித்த நீரைப் போல சட்டென இரைத்துவிட்ட உணர்வை இருவரின் உடல்மொழிகளும் காட்டிக்கொடுத்தன. என்னதான் வெட் சாட்டிங் , வீடியோ கால் என டெக்னாலஜியின் பிடியில் காதலைக் கொடுத்தாலும்… மெது மெதுவாகப் புரிந்துகொண்டு, கண்கள் பார்த்துப் பேசி, வெட்கப் புன்னகை பூக்க, தொடுவோமா மாட்டோமா என்கிற சிறிய ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் குவிந்த பின், அணைப்பதும் முத்தமிடுவதும் கொடுக்கிற நேரடியான முதன்முறை அனுபவத்துக்கு முன் விர்சுவல் உலகின் கற்பனைக் காதல் ஈடாகாது என்பதை அவர்களின் உணர்வுகளே அவர்களுக்கு தெளிவாகப் புரிய வைத்திருந்தன.

“இந்த நாள் இவ்வளவு மொக்கையா போகும்னு நான் எதிர்பாக்கலடா’’ – எதுவும் பேசாமல் எழுந்து நடந்தாள் ஜீவிதா.

“எனக்கும் இது ஏன்னு தெரியலை. நீ வீட்டுக்குக் கிளம்பு, நம்ம போன்ல பேசுவோம்’’ – ஜீவிதாவை வழியனுப்பிவிட்டு ஆகாஷும் கிளம்பினான்.

காதலர்கள்

`வீட்டுக்கு வந்தாச்சு’ என்கிற சம்பிரதாய செய்தியை மட்டுமே இருவருமே பகிர்ந்து கொண்டார்கள். அதன்பின் எந்த சண்டைகளும் இல்லை. அதுபோலவே இருவருக்குள்ளும் எந்தவிதமான சாட்டிங்கோ போன் கால்களோ இல்லை. நதியின் பாதையில் நகர்ந்து போகும் மெல்லிய இலையைப் போல இருவருமே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலை மட்டுமே நிதானமாய் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

சரியாக இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு சந்திப்பு.

ஜீவிதா தான் ஆகாஷை ஓடி வந்து அணைத்தாள். அப்போது அவள் நெற்றி நிரம்ப முத்தங்களைக் குவித்திருந்தான் ஆகாஷ்.

“நான் பேசலைனா… நீயும் பேச மாட்டியாடா ராஸ்கல்?’’

“நீ இல்லாம நான் எப்டிடி இருப்பேன். லவ் யூ டி உசுரே’’ – அவள் காதுமடலின் தோடருகே சென்று ஹஸ்கி வாய்ஸில் சொன்னான்.

இருவரும் அணைத்துக்கொண்ட நேரத்தில் சில வண்ணத்துப் பூச்சிகள் அவர்களை வட்டமிட்டுப் பறந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.