IND vs PAK: "உலகக்கோப்பைக்காக உயிரைக் கொடுத்து ஆடுவோம்!" – கேப்டன் ரோஹித் சர்மா உறுதி

டி20 உலகக்கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நிறைய விஷயங்களைப் பேசியிருந்தார்.

Rohit Sharma

அவர் பேசியவை இங்கே, “கடந்த போட்டியில் என்ன செய்தோமோ எப்படி ஆடினோமோ அதையேத்தான் பாகிஸ்தானுக்கு எதிராகவும் செய்யப்போகிறோம். இந்தப் போட்டிக்கென வித்தியாசமாக எதையும் செய்யப்போவதில்லை. பேட்டிங், பௌலிங், பீல்டிங் என எல்லா பாக்ஸிலும் டிக் அடிக்க முயல்வோம்.

பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் கடந்த டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேயிடம் தோற்றார்கள். ஆனால், இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். டி20 வித்தியாசமான பார்மேட். அன்றைய நாளில் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம்.

பாகிஸ்தான் தாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்தியிருப்பார்கள். இப்போதெல்லாம் எல்லா அணிகளுமே நிறைய டி20 க்களில் ஆடுகிறார்கள். எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்தக்கூடிய வல்லமையோடு இருக்கிறார்கள்.

போட்டிகளை வெல்ல எதோ ஒன்றிரண்டு வீரர்களை மட்டும் சார்ந்திருக்க நான் விரும்பவில்லை. 11 வீரர்களும் வெற்றிக்கான பங்களிப்பை கொடுக்க வேண்டும்.

விராட் கோலி கடந்த போட்டியில் சிறப்பாக ஆடவில்லை. வங்கதேசத்துக்கு எதிராகப் பயிற்சி போட்டியில் ஆடியிருக்கவில்லை. ஆனால், விராட் கோலி பெரும் அனுபவமிக்க வீரர். இதேபோன்ற பல பெரிய போட்டிகளில் ஆடியிருக்கிறார். அதனால் அவருக்கு எதுவுமே பெரிய சிரமமில்லை.

ஆட்டத்தின் இடையே காயம் ஏற்பட்டு அதை தாங்கிக் கொண்டு ஆடுவது கடினம்தான். ஆனால், வீரர்கள் மனரீதியாக உறுதியாக இருக்க வேண்டும். நம்முடைய வீரர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். மனரீதியாக வலுவாக இருப்பதால்தான் 140 கோடி பேர்களிலிருந்து 11 பேரில் ஒருவராகத் தேர்வாகியிருக்கிறார்கள். காபா டெஸ்ட் ஞாபகம் இருக்கிறதா? பல வீரர்களுக்கும் அந்தப் போட்டியில் காயம் ஏற்பட்டது. மன உறுதி இருந்ததால் மட்டுமே அந்தப் போட்டியை வெல்ல முடிந்தது.

India

இது உலகக்கோப்பை. நீங்கள் உலகக்கோப்பையில் உங்கள் தேசத்துக்காக ஆடுகிறீர்கள் என்பதை விடப் பெரிய விஷயம் இருக்க முடியுமா? எனில் கை, கால், தலை என எங்கே அடிபட்டாலும் அதையெல்லாம் இரண்டாம்பட்சமாக வைத்துவிட்டு அணியை முன்னிலைப்படுத்தி போராடி நம்முடைய பணியை சிறப்பாக முடிக்க வேண்டும்.

முன்பெல்லாம் நான்கு ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பாகிஸ்தானுடன் ஆடுவோம். அதனால் அந்தப் போட்டிகள் பெரிதாகத் தெரிந்திருக்கலாம். இப்போது அப்படியில்லை. 7 மாதங்களுக்கு முன்புதான் அவர்களுடன் உலகக்கோப்பையில் ஆடியிருக்கிறோம். நான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியையுமே மற்றுமொரு சாதாரண சர்வதேச போட்டியாகவே பார்க்க நினைக்கிறேன். ஒரு கேப்டனாக பெரிதாக பல விஷயங்களை நான் யோசிக்க விரும்பவில்லை. அடுத்த ஓவரில் ஒரு கேப்டனாக என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டும்தான் என்னுடைய கவனம் இருக்கும்.

Rishabh Pant

பண்ட் மாதிரியான ஒரு வீரருக்கு எந்த ஆர்டரைக் கொடுப்பது என்பது பெரிய குழப்பமாக இருக்கும். ஆனால், ஐ.பி.எல் இன் முதல் பாதியை பார்த்தவுடனேயே அவருக்குதான் நம்பர் 3 என்பதை முடிவு செய்துவிட்டேன். டாப் 4 இல் முழுவதுமாக வலதுகை பேட்டர்களாக இருந்தோம். யாஷஸ்வியும் லெவனில் இருக்கப்போவதில்லை என்பதால் பண்ட் அந்த நம்பர் 3 இல் வந்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்தோம். தொடர் செல்ல செல்ல ஸ்பின்னர்களின் ஆதிக்கம் கூடும். அப்போது மிடில் ஓவர்களில் பண்ட்டால் கவுண்டர் அட்டாக் செய்து ஆட முடியும். ஆனாலும், ஓப்பனர்கள் இருவரின் இடம் மட்டும்தான் அணியில் நிலையானது. நம்பர் 3 யிலிருந்து 7 வரைக்கும் உள்ளவர்கள் சூழலைப்பொறுத்து எங்கே வேண்டுமானாலும் இறங்க வேண்டும் என்பதை கூறிவிட்டேன்.

மற்ற மைதானங்களை போல நியூயார்க் மைதானத்தில் உள்ளே இறங்கியவுடன் பேட்டை வீசி அடித்து ஆட முடியாது. நான் ரொம்பவே அதிரடியாகவும் ஆட விரும்பவில்லை. தற்காப்பாகவும் ஆட விரும்பவில்லை. சூழலைப் பொறுத்து ஒருவித சமநிலையோடு ஆட விரும்புகிறேன். ஆனாலும், நாங்கள் 8 பேட்டர்களோடு செல்கையில் டாப் ஆர்டரில் யாரோ ஒருவர் துணிச்சலாக அதிரடியாக ஆட வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது” என்றார் ரோஹித் சர்மா.

இந்தியா V பாகிஸ்தான் போட்டியில் வெல்லப்போவது யார் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.