நியூயார்க்,
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோத உள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் நடைபெறும் மைதானத்தின் ஆடுகளம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆடுகளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ரோகித் சர்மா கூறியதாவது,
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது எந்த ஆடுகளம் ஒதுக்கப்படுகிறது என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. ஆடுகளத்தை வடிவமைத்தவர்களிடம் பேசியபோது ஆடுகளம் எவ்வாறு இருக்கும், பேட்டிங்கிற்கு சாதகமானதா? பந்து வீச்சுக்கு சாதகமானதா? என்பது குறித்து அவர்களுக்கே குழப்பம் உள்ளது. இது போன்ற ஆடுகளங்களுக்கு பழக்கப்படதா நாட்டில் இருந்து வந்துள்ள எங்களுக்கு உள்ள குழப்பத்தை நினைத்து பாருங்கள்.
மற்ற ஆடுகளத்தைபோல நியூயார்க் ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சுலபமல்ல. நீங்கள் அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனது அனுபவத்தை பயன்படுத்தி விளையாட வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.