புதுடெல்லி: டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையொட்டி மோடி இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் வாஜ்பாயி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கும் சென்றார். போர் நினைவிடத்தில் மோடியுடன் ராஜ்நாத் சிங்கும் இருந்தார்.
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3- வது முறையாக தக்கவைத்துக் கொண்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் 9-ம் தேதி (இன்று) இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். இந்த தகவல் குடியரசுத் தலைவர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளிப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர். பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி யேற்றுக்கொண்ட பிறகு ஒரு வாரத்தில் வாராணசிக்கு செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதால் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியில் 5 கம்பெனி துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், ட்ரோன்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தரை முதல் வான்பகுதி வரையில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், டெல்லியின் எல்லைகள் மற்றும் போக்குவரத்து சோதனை மையங்களில் தீவிர தணிக்கை நடத்தப்படுகிறது. அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ள இதனிடையே, குடியரசுத் தலைவர் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். வெளிநாட்டு தலைவர்கள் தங்க உள்ள ஓட்டல்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளன.